Wednesday, March 7, 2018

82- மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தை

மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பனையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர்பெண்கொடியை
வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே

மதயானை போலெழுந்தமாமுகில்காள்- மதம் கொண்ட யானையைப் போல கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பனையான் வார்த்தையென்னே-வேங்கடத்தை உறவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே...பாம்பின் மீது படுத்து இருப்பவன் வார்த்தைதான் என்ன? (அவன் என்னதான் சொல்கிறான்)

கதியென்றும் தானாவான் கருதாது ஓர்பெண்கொடியை- அனைவருக்கும் புகலிடம் அவந்தான் என எண்ணாது, இங்கு ஒரு பெண்கொடியை (அவளைச் சென்று சேராமல்) வதை செய்தான் என்னும் கெட்டப்பெயர் அவனுக்கு உண்டானால் வையகம் அவரை மதியாது


மதம் கொண்ட யானையைப் போல கிளர்ந்து எழுந்த மேகங்களே! வேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே! பாம்பின் மீது படுத்திருக்கும் வேங்கடத்தான் என்ன தான் சொல்கிறான்? அனைவருக்கும் அவனே புகலிடம் எனும்போது , அவன் ஒரு பெண்கொடியை(தன்னை..இன்னும் வந்து சேராமல்) வதம் செய்தான் என்ற கெட்டப் பெயர் அவனுக்கு உண்டானால், வையகத்தார் அவனை மதிக்கமாட்டார்கள் (என்று சொல்லுங்கள் என் கிறாள் மேகத்திடம்)

No comments:

Post a Comment