Sunday, March 18, 2018

123 - மன்னு மதுரை தொடக்கமாக

மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னையும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன் கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே

மன்னு மதுரை தொடக்கமாக  - நிலைபெற்ற அழகைக் கொண்ட மதுரையைத் தொடக்கமாகக் கொண்டு

வண் துவராபதி தன்னையும் - அழகிய துவராபதிவரையிலும்

தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டி - தன்னைத் தன் சுற்றத்தார் கண்ணனிடம் கொண்டு சேர்க்க வேண்டி

தாழ் குழலாள் துணிந்த துணிவை - நீண்ட கூந்தலைப் பெற்றவள்(கோதை) துணிந்த துணிவை

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் - பொன் மாடங்கள் அழகுறத் தொன்றும்

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை - வில்லிபுத்தூர் தலைவன் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் மகள் கோதை

இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை - இன்னிசையால் சொன்ன செம்மையான சொல் பாமாலையை

ஏத்த வல்லார்க்கிடம் வைகுந்தமே - பாடிப் புகழ் வல்லார்களுக்கு உரிய இடம் வைகுந்தமே

நிலையான அழகுக் கொண்ட மதுரை தொடங்கி துவராபதி வரையிலும், தன்னை ,தன் சுற்றத்தார் கண்ணனிடம் சேர்க்க வேண்டி, நீண்ட கூந்தலைப் பெற்ற கோதையின் துணிவை, பொன் மாடங்கள் அழகுறத் தோன்றும், வில்லிப்புத்தூர் தலைவன் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார் மகள் இன்னிசையால் சொன்னாள்.அந்தப் பாமாலையை பாடிப்புகழ் வல்லாருக்கு உரிய இடமாக வைகுந்தம் அமையும்

(பென்னிரெண்டாம் திருமொழியின் பத்துப் பாடல்களிலும், கண்ணன் திருவிளையாடல் புரிந்தத் தலம்/வளர்ந்தத் தலம் ஆகியவற்றிற்குக் கொண்டு சென்று விடச்சொல்கிறாள்)

No comments:

Post a Comment