Wednesday, March 14, 2018

110- உண்ணா துறங்கா தொலிகடலை

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற போதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ்த் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே!

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்து- உணவு உண்ணாமல், தூங்காமல் நாளும் ஒலிக்கின்ற கடலின் உள்ளே சென்று பிளந்து

பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற போதெல்லாம்= பெண் உடல் மீது விருப்பம் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு தாம் உற்ற மயக்கத்தை எல்லாம்

திண் ஆர் மதிள் சூழ்த் திருவரங்கச் செல்வனார்- உறுதி நிறைந்த மதிள்கள் சூழ்ந்த திருவரங்கத்து செல்வனார்

எண்ணாதே தம்முடைய நன்மைகளேயே எண்ணுவரே- மறந்துவிட்டு தம் நன்மைகளை மட்டும் எண்ணுகிறாரே!

உணவு உண்ணாமல் தூங்காமல் தினமும் அலைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலைப் பிளந்து  ,பெண்ணான சீதையின் மீது கொண்ட பற்றினால் சென்று போரிட்டு திரும்பிய உறுதி சூழ்ந்த மதிள்கள் நிறைந்த திருவரங்கத்து செல்வம் மிக்கவன் (திருவரங்கன்),இன்று அனைத்தையும் மறந்துவிட்டு (இன்று அவனுக்காக காலமும் காத்திருக்கும் என்னை மறந்து) தன் நன்மைகளை மட்டுமே எண்ணுகிறாரே! 

No comments:

Post a Comment