Wednesday, February 28, 2018

58-மத்தளம் கொட்டவ ரிசிங்கம் நின்றூத

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

மத்தளம் கொட்டவரி சங்கம் நின்றூத- மத்தளம் கொட்ட வரிகள் நிறைந்த சங்கு நெடுநேரம் ஊத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற் கீழ்-முத்துகளை உடைய மாலைகள் வரிசையாகத் தொங்க அந்தப் பந்டஹ்லின் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து-என்னுடைய நம்பி மதுசூதன்  வந்து
என்னைக்  கைத்தலம் பற்ற-என் கைகளைப் பற்ற
கனாக் கண்டேன் தோழீநான் - கனவு கண்டேன் தோழீ நான்

மத்தளம் கொட்ட (கெட்டி மேளம்), வரி சங்கு நீண்ட நேரம் ஊத (மங்கள நிகழ்ச்சிக்காக) முத்துகளை உடைய மாலைகள் வரிசையாகத் தொங்க, அந்தப் அப்ந்தலின் கீழ் என்னுடைய நம்பி மதுசூதனை கைத்தலம் பற்றுவது போல கனவு கண்டேன் தோழி 

57- கதிரொளி தீபம்க லசமுடனேந்தி

கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி- கதிரவனின் ஒளிபோல ஒளி வீசும் தீபங்களையும்,பொற் கலசங்களையும் ஏந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள-அழகிய இளமையான பெண்கள் தாமே முன் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு எங்கும்-(வட) மதுரை மன்னன் நடப்பதில் அவன் பாதத்தின் அடியில் இருந்து நிலம் எங்கும்
அதிரப் புகுதக்- அதிர (அவர் நடந்து வந்து மணப்பந்தல்)புகுவது   போன்று
கனாக் கண்டேன் தோழீநான்-நான் கனவு கண்டேன் தோழீ


அழகிய இளம்பெண்கள், சூரியனின் ஒளி போன்று ஒளி வீசும் தீபங்களையும், பொன் கலசங்களையும் ஏந்தி வரவேற்க மாப்பிள்ளையான வடமதுரை கண்ணன் நிலம் அதிருபடியாக நடந்து வந்து மணப்பந்தலில் புகுவது போல கனாக் கண்டேன் தோழீ

56= நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி

நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பன சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக் க னாக்கண்டேன் தோழீ

நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி- நான்கு  திசைகளில் இருந்தும் தீர்த்தம்கொண்டு வந்து அதை நன்றாகத் தெளித்து
பார்ப்பன சிட்டர் கள் பல்லார் எடுத்தேத்தி-வேதம் ஓதும் அந்தணர்கள் பலர் மந்திரம் சொல்லி
பூப்புனை கண்ணிப்புனிதனோடு  என்றன்னை-பலவித பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு  என்னை இணைத்து
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ-காப்புக்கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ

(இந்து சம்பிராதயப்படி..ஒவ்வொன்றாக திருமணச் சடங்குகள் நடப்பதாகக் கனவு காண்கிறாள்)

நான்கு திசைகளில் இருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து அதைத் தெளித்து,வேதம் ஓதும் பார்ப்பனர்கள் மந்திரம் சொல்ல, பலவிதமான பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு என்னை இணைத்து, காப்புக்கயிறு (கங்கணம்) கட்டக் கனாக் கண்டேன் தோழீ 

55= இந்திர நுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்

இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந் தென்னமை கட்பேசி மந்தரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீ

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்-இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி  தேவர் கூட்டம்
வந்திருந்து என்னமை கட்பேசி மந்தரித்து-அனைவரும் வந்து விழாவை சிறப்பித்து  இதுதான் பெண் என்று பேசி முடிவு செய்து, மந்திரம் சொல்லி
மந்திரக் கோடி உடுத்தி-மணப்பெண்ணிற்கு புதுத்துணி உடுத்தி
மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் தோழீ-மாதவனின் தங்கையான துர்க்கை மணமாலையை அணிவித்துவிட கனாக் கண்டேன் தோழீ

இந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் வர, இரு வீட்டார் சம்மதத்துடன், இதுதான் பெண், இதுதான் மாப்பிள்ளை என்று பேசி, அவங்க நல்லபடி வாழ மந்திரங்கள் சொல்லி,மணப்பெண்ணுக்கு புத்தாடை உடுத்தி, அந்தரி என்னு மணமகனின் தங்கை மூலமாக மணமாலையும் சுட்டறாங்க.இப்படியெல்லாம் கனாக் கண்டேன் தோழீ என் கிறார்.

54 - நாளைவ துவைம ணமென்று நாளிட்டு

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பானோர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீ

நாளை வதுவை மணமென்று நாளிட்டு- நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்- பாக்குமரப் பட்டைகளால் அழகுறச் செய்யப்பட்ட மணப்பந்தலின் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்-குறிப்பிட்ட அந்த நன்னாளில் அழகு பொருந்திய ஒளி மிக்க சிங்கம் போன்றவன் மாதவன், கோவிந்தன் என்ற பெயர் கொண்ட
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ-காளை புகுந்தது போன்ற கனாக் கண்டேன் தோழீ

நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து,அந்நன்னாளிலே, பாக்கு மரப்பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான மணப்பந்தல் போட்டு அதன் கீழ் ஒளி பொருந்திய சிங்கம் போன்ற மாதவன், கோவிந்தன் என்ற பெயருள்ள காளை கம்பீரமாகப் புகுவது போன்ற கனவு ஒன்று கண்டேன் தோழி

Tuesday, February 27, 2018

53- வாரணமாயிரம்

(திருவாய்மொழியின்  முதல் பத்துப் பாடல்கள், மன்மதனிடம் வேண்டுதல்,அடுத்து சிற்றில் சிதையாதே என்று பத்துப்பாடல்கள்,பின்னர்..உடைகளைத் திருடியவனிடம் ,திருப்பித் தர வேண்டி பத்துப்பாடல்கள்,கூடல் குறி கேட்டு பத்துப் பாட்ல்கள்,குயிலைக் கூவச் சொல்லிப் பக்த்துப்பாடல்கள் முடிந்தன.
இனி, கண்ணனுடன், திருமணம் ஆனால் எப்படி இருக்கும் என கனவு காண்கிறாள் நங்கை.இந்த வாரணம் ஆயிரம் , பதினொன்று பாடல்களை பாராயணம் செய்தால் திருமண யோகம் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை.
அந்த நம்பிக்கை சரியோ, தவறோ....அது பற்றியெல்லாம் கவலைப்படாமல்நாச்சியார் கனாக் காணும் அழகினை ரசியுங்கள்)

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து- ஆயிரம் யானைகள் புடைசூழ தெருக்களைச் சுற்றி வந்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்-அந்த நாராயணன் நம்பி நடக்கின்றான், அவரை எதிர் கொண்டு வரவேற்க
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்-பூரண கும்பமும், பொற்குடமும் வைத்து நாற்புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்- தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நாலாபுரமும் தோரணங்கள் என தெருவே கலை கட்டி நிற்க, ஆயிரம் யானைகள் புடை சூழ கம்பீரமாக சுற்றிவரும் (மாப்பிள்ளை ஊர்வலம்)நாராயணன், பின் இறங்கிக் கம்பீரமாக நடந்து வர, பொன்னாலான பூர்ண கும்ப மறியாதைககளுடன் எதிர் கொண்டு வரவேற்கிறார்களாம்..அப்படிப்பட்ட கனவு ஒன்றினைக் கண்டேன் தோழீ .

52- விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுறவென் கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி  லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்முறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான் கோதை சொன்ன
நண்ணுறு  வாசக மாலைவல்லார்
நமோ நாராய ணாயவென் பாரே

விண்ணுற நீண்ட அடி தாவிய மைந்தனை- வானம் அளவு நீண்டு அடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி-வேல் போன்ற கண்களையுடைய பெண் விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு-தான் பார்த்து மகிழ , நேரில் வந்து சேர ,என் கடல் வண்ணனை வரக் கூவு
கருங்குயிலே என்ற மாற்றம் பண்ணுற-கருங்குயிலே , என்று பத்துப் பாடல்களைப் பாடினாள்.
நான்மறையோர் புதுவை மன்னன்-நான் கு  மறை ஓதுபவர் வில்லிபுத்தூர் மன்னன்
பட்டர் பிரான் கோதை சொன்ன- பெரியாழ்வார் என்ற பட்டர் பிரான் மகள் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல்லார்-நன்மையை விளைவிக்கும் இந்தப் பாமாலையைப் பாடுபவர்
நமோ நாராயனாய வென்பாரே- (அவன் திருவடிகளில்) நமோ நாராயணா எனக் கூறும் வல்லமையைப் பெறுவர்

(மடந்தை - 14 முதல் 19 வயதுள்ள பெண்கள்)
உல்களந்த பெருமாளை, வேல் போன்ற கண்கலையுடைய பெண் விரும்பி, தான் பார்த்து மகிழ, நேரில் வருமாறு கூவிடு குயிலே என்று பாடினாள்.
நான் கு மறை ஓதுபவர், வில்லிப்புத்தூர் மன்னன் பெரியாழ்வார் மகள் பாடிய குயிலைத் தூது விட்ட இப்பத்துப் பாடல்களைப் பாடினால்"நமோ நாராயணா" என்று கூறி அவனது திருவடிகளை அடையும் பாக்கியத்தினைப் பெறுவர்

51- அன்றுல கம்மளந் தானையுகந்தடி

அன்றுல கம்மளந் தானையுகந்தடி
மைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறமை யறியேன்
என்றுமிக் காவி லிருந் தென்னைத்
தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்

அன்றுலகம் அளந்தானை உகந்து-அன்று உலகம் அளந்தவனை மனதிற்கு உகந்தவனாகக் கொண்டு விரும்பினேன்
அடிமைக்கண் அவன் வலி செய்ய-அவனுக்கு அடிமையாய் இருக்கும் பொருட்டு அவனை விரும்பினால் , அவனோ என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையைத் தந்தான்
தென்றலும் திங்களும் ஊடறுத்து-தென்றலும், நிலவும் என் உயிரின் ஊடே பிளந்து
என்னை நலியும் முறமை யறியேன்-என்னை வதைப்பது என்ன முறையோ நான் அறியேன்
என்றும் இக்காவிலிருந்து என்னைத்-எப்போதும் இந்தச் சோலையிலிருந்து என்னை
தகர்த்தாதே நீயும் குயிலே-நீயும் வதைக்காதே குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்-இன்று நாராயணன் என்னுடன் இணையவர நீ கூவாவிடின்
இங்குத்தை நின்றும் துரப்பன்-இங்கிருந்து உன்னை துரத்திவிடுவேன்

உலகம் அளந்த எம்பெருமானை. மனதிற்கு உகந்தவனாக எண்ணி விரும்பினேன்.அவனுக்கு அடிமையாய்  இருக்க எண்ணினேன்.அவனோ, என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையைத் தா ன் தந்தான்.தென்றலும், நிலவும் என் உயிரை வதைக்கின்றதே அது ஏன்?எப்போதும் இந்தச் சோலையில் இருந்து நீயும் என்னை வதைக்காதே குயிலே.இன்று நாராயணன் என்னுடன் இணைய ,நீ கூவாவிடின், உன்னை இங்கிருந்து துரத்தி விடுவேன் (என..சற்று கண்டிப்பு, சற்று செல்லத்துடன் சொல்கிறாள்) 

50- பைங்கிளி வண்ணன் சிரீதரனெம்பதோர்

பைங்கிளி வண்ணன் சிரீதரனென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே!குறிக் கொண்டிது நீ கேள்
சங்கொடு சக்கரத் தான் வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன்றேல்திண்ணம் வேண்டும்

பைங்கிளி வண்ணன் சிரீதரனென்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்- பசுமையான கிளி வண்ணம் கொண்ட சிரீதரன் என்பதோர் பாசத்தில் நான் அகப்பட்டு இருந்தேன்
பொங்கும் ஒளி வண்டு இரைக்கும் பொச்ழன்ங்குடன் சக்கர வாழ் குயிலே-ஒளி மிக்க வண்டுகள் ரீங்காரமிடும் சோலையில் வாழும் குயிலே
குறிக்கொண்டு இது நீ கேள்- நான் சொல்வதைக் கவனமாகக் கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்-சங்குடன், சக்கரமும் சேர்த்து வைத்துள்ளவனை வருமாறு கூவு
பொன்வளை கொண்டு தருதல்-அல்லது என் பொன் வளையல்களைத் திருப்பிக் கொடு
இங்குள்ள காவினில் வாழக் கருதில்-இங்கு சோலையில் நீ வாழவேண்டுமாயின்
இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்-இந்த இரண்டினில் ஒன்றை நீ உறுதியாய் செய்திடல் வேண்டும்

பசுங்கிளி போன்றபச்சை நிறத்தவன் ஸ்ரீதரன்.அவன் மீது பாசம் வைத்து அதிலேயே அகப்பட்டுக் கொண்டேன்.ஒளி மிகுந்த வண்டுகள் ரீங்காரமிடும் சோலையில் வாழும் குயிலே! நான் சொல்வதைக் கேள்.சங்குடன் சக்கரமும் வைத்திருப்பவனை வரச்சொல்லிக் கூவு.இல்லையேல், அவன் என்னை சேராததால் வருந்தி, மெலிந்த என் கைகளிலிருந்து கழண்டு விழுந்த பொன் வளையல்களைத் திருப்பித்தந்துவிடு.
இந்த சோலையிலெயே இருக்க வேண்டுமானால், இந்த இரண்டில் ஒன்றைச் செய்வாயாக


Monday, February 26, 2018

49- சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கை

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்
நாங்காளம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர்  கோதும்
சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்
அவனை நான் செய்வன காணே

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்-வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளையுடையவன்
நாங்காளம் இல்லிருந்து தொட்டியகச்சங்கம்-நாங்கள் இருவரும் எங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம்
நானும் அவனும் அறிதும்- நானும் அவனும் மட்டுமே அறிவோம்
தேங்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயிலே-இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான (சிவப்பான)தளிர்களைக் கோதும் குயிலே
திருமாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்-திருமால் இருக்கும் இடம் சென்று அவரை என்னைவிரைந்து  வந்து சேரக் கூறுவாயாயெனில்
அவனை நான் செய்வன காணே-அவன் என்னைக் காணும் போது என்னச் செய்கிறேன் என்று பார்

(அவர் மட்டும் வரவில்லை என்றால்...என்ன செய்வேன்..என்று செல்ல மிரட்டல் விடுக்கிறாள்)
வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன், அவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை , நானும், அவனும் மட்டுமெ அறிவோம்.இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பினில், சிவந்த தளிர்களை கோதும் குயிலே! திருமால் இருக்கும் இடம் சென்று உடன் விரைந்து இங்கு வந்து என்னைப் பார்க்கசொல்.அவர் வரட்டும், என்ன நடக்கிறது என்று பார்.(அவனுக்கு வைச்சிருக்கேன் என்று மிரட்டுவது போல கொஞ்சல்) 

43- வெள்ளை விளிசங்கிடங்கையிற்

வெள்ளை விளிசங்கிடங்கையிற்
கொண்ட விமலனெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங்குயிலே
மெள்ள விருந்து மிழற்றி
மிழற்றாதென் வேங்கட  வன்வரக் கூவாய்

வெள்ளை விளி சங்கிடங்கையிற்
கொண்ட- கூவும் வெண்மையான சங்கினை இடக்கையில் கொண்ட
விமலன் எனக் குருக் காட்டான்-விமலன், எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்
உள்ளம் புகுந்து என்னைநைவித்து நாளும்-என் உள்ளத்தில் புகுந்து என்னை வருத்தி நாள்தோறும்
உயிர் பெய்து கூட்டாட்டுக் காணும்-என் உயிர் வதைத்து கூட்டாடுவதைக் காண்பான்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்-தேன் சுரக்கும் செண்பகப் பூ மலர் கோதி
களித்து இசை பாடும் குயிலே-இன்பத்துடன் இசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி- மெதுவாக இருந்து மழலைமொழி பேசி என் அருகே இருந்து என்னை வதைக்காமல்
மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்- என் வேங்கடவன் வர நீ கூவுவாயாக

48- பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோராசயினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
ஆங்குயிலே! உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவனைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி

பொங்கி பாற்கடல் பள்ளி கொள்வானைப்= பொங்கி எழுந்த பாற்கடலில் அரவணையில் பள்ளிக் கொண்டிருப்பவனைப்
புணர்வதோர் ஆசையினால்- கூடல் செய்கின்ற ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து-என் முலைகள் கிளர்ந்து சூடாகி குதூகலம் கொண்டு
ஆவியை யாகுலஞ் செய்யும்-என் உயிரை துன்புறுத்தும்
ஆங்குயிலே உனக்கென்ன மறைந்துறைவு-அழகிய குயிலே
உனக்கு என்ன மறைவு வாழ்க்கை வேண்டியிருக்கிறது
ஆழியும் சங்குமொண் தண்டும்-சக்கரமும், சங்கும், கதையும்
தங்கிய கையவனை வரக்கூவில் -கையில் கொண்டவனை வரக் கூவுவாயெனில்
நீ சாலத் தருமம் பெறுதி- உனக்கு மிகவும் புண்ணியமாய் இருக்கும்

பொங்கி எழுந்த பாற்கடலில் அரவனையில் பள்ளிக் கொண்டிருப்பவனைக் கூடும் ஆசையால் என் முலைகள் கிளர்ந்து சூடாகி, குதூகலம் கொண்டு என் உயிர துன்புறுத்தும்.அப்படியான நேரத்தில், அழகிய குயிலே உனக்கு மறைவு வாழ்வு என்ன வேண்டியுள்ளது.சக்கரமும், சங்கும், கதையும் கையில் கொண்டவனை ,இங்கு வருமாறு கூவுவாயாயின், உனக்கு மிகவும் புண்ணியமாகும்

47- எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்

எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலையு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக்  கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே

எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்-எல்லாதிசைகளிலும் வானவர்கள் வணங்கும்
இருடீகேசன் வலி செய்ய- ரிஷிகேஷன் எனக்குக் காட்சித் தராது மனம் வலிக்கச் செய்கிறான்
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்-முத்துப் போன்ற வெண்மையான பற்களோடு அழகாக முறுவல் செய்த என் வாயும்
முலையும் அழகழிந்தேன்நான்- எனது முலைகளின் அழகையும் இழந்த நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை-கொத்து கொத்தாக மலர்கள் கொண்ட சோலையிலே அழகிய இடத்தில் உறக்கம்
கொள்ளும் இளங்குயிலே- கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனைவரக் கூகிற்றியாகில்-என் தத்துவனை வரக் கூறுவாய் ஆகில்
தலையல்லால் கைம்மாறிலேனே-காலமெல்லாம் அதற்கான கைமாறாக என் தலையை உன் பாதத்தில் வைத்து வணங்குவேன் .வேறு கைமாறு அறியேன்

பூங்கொத்துகள் நிறைந்த சோலையில், அழகிய இடத்தில் உறக்கம் கொள்ளும் இளங்குயிலே, என் இறைவன் என்னை  சேர வரக் கூறுவாய் எனில் காலம் முழுதும் உன் பாதங்களில் என் தலையை வைத்து நன்றியாய் இருப்பதைத் தவிர வேறு எதையும் நான் அறியலேன்.

46-மென்னடை யன்னம் பரந்து விளையாடும்

மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென்
பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந் தான்வரக் கூவாய்

மென்னடை அன்னம் பரந்து விளையாடும்-மெல்ல நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து விளையாடும்
வில்லிப்புத்தூர் உறைவான் தன்-வில்லிப்புத்தூரில் உறைந்துள்ளவன் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்-பொற்பாதங்களை காணும் ஆசையினால்
என் பொரு கயற் கண்ணினை துஞ்சா-என் மீன் போன்ற கண்கள் தூங்கவில்லை
இன்னடி சிலோடி பால் அமுதூட்டி-இனிமையான அக்காரவடிசலோடு பால் அமுதும் ஊட்டி
வளர்த்த என் கோலக்கிளியை- வளர்த்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே-உன்னோடு நட்பாக ஆக்கிகின்றேன் குயிலே
உலகளந்தான் வரக் கூவாய்- உலகளந்த எம்பிரான் வரக் கூவுவாயாக

மெல்ல நடக்கும் அன்னம், பரந்து விளையாடும் வில்லிப்புத்தூரில் உறைந்துள்ளவனின் பொற்பாதங்களைக் காணும் ஆசையினால், என் மீன் போன்ற கண்கள் துங்கவில்லை.இனிமையான அக்காரவடிசலோடு, அமுதூட்டி வளர்த்து வரும் என் கிளியை, குயிலே உனக்கு நட்பாக்குகிறேன்.அதற்கு பதிலாக, உலகளந்த என் தலைவன் வர வேண்டி கூவுவாயாக 

Sunday, February 25, 2018

45-என்புருகியின வேல்நெடுங்கண்கள்

என்புரு கியன வேல்நெடுங்கண்கள்
இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்தனென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறுநோயது
நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்

என்பு உருகியின- என் எலும்புகள் உருகின
வேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்-வேலினை ஒத்த நீண்ட என் கண்கள் இமை மூடவில்லை
பல நாளும் துன்பக் கடல் புக்கு-பல நாட்களாக துன்பம் எனும் பெரும் கடளில் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்-வைகுந்தம் என்பவனே எனக்கு அந்தக் கடலில் இருந்துமீட்கும் தோணியாக வரமுடியும்.அந்தத் தோணியைப்  பெற இயலாது உழல்கிறேன்
அன்புடையாரைப் பிரிவுறும் நோய் அது-அன்புக்குரியவர்களைப் பிரிந்து வடும் நோய் அதுவென
நீயும் அறிதி குயிலே-நீயும் அறிந்திருப்பாய் அல்லவா குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடை-பொன்னை ஒத்த மேனி கொண்ட கருடனின் கொடியைக் கொண்ட
புண்ணியனை வரக் கூவாய்- புண்ணியன் வரக் கூவுவாயாக

(பசலை நோயால்) என் எலும்புகள் உருகின.வேலினை ஒத்த நீண்ட என் கண் இமைகள் மூடவில்லை.பல நாட்களாகத் துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன்.அதை மீட்க வைகுந்தம் என்பவன் ஒருவனால்தான் முடியும்.அதைப் பெற இயலாது உழல்கிறேன்.இது, அன்புக்குரியவர்களை பிரிந்து வாடும் நோய் இதுவென நீ அறிவாயேகுயிலே.ஆகவே..பொன்னினை ஒத்த மேனியைக் கொண்டவனும், கருடனைக் கொடியாகவும்கொண்ட புண்ணியன் வைகுந்தனை வரச் சொல்லி கூவுவாயாக!

44- மாதலி நேர்முன்பு கோல்கொள்ள மாயன்

மாதலி நேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங்காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங்கேட்டு உன்
காதலி யோடுடன் வாழ்குயி லே! என்
கருமாணிக் கம்வரக் கூவாய்

மாதலி நேர் முன்பு கோல் கொள்ள மாயன்- மாதலி என்பவன் ராமனுக்காக முன்புறமாக தேர் ஓட்ட
இராவணன் மேல் சரமாரி-மாயம் செய்யும் இராவணன் மீது சரமாறி
தாய்தலை அற்று அற்று வீழத் தொடுத்த-(பத்துத் தலைகள்)ஒவ்வொரு தலையாக அறுந்து, அறுந்து வீழ விடாமல் தொடுத்த (அம்பு எய்திய)
தலைவன் வரவெங்குக்காணேன்-என் தலைவன் இங்கு வருவதைக் காணவில்லை
போதலர் காவில் புது மணம் நாறப்-மலரும் பருவத்தில் உள்ள மலர்கள் உள்ள சோலையில் புது மணம் வீச
பொறி வண்டின் காமரங்கேட்டு-உடம்பில் புள்ளிகள் கொண்ட வண்டின் இசைப்பாடல் கேட்டு
உன் காதலியோடு உடன்வாழ் குயிலே-உன் காதலியுடன் வாழ்ந்து வரும் குயிலே
என் கருமாணிக்கம் வரக் கூவாய்_ என் கருநிற மாணிக்கமான கண்ணன் வரக்கூவுவாயாக

(மாதலி., இந்திரனின் தேரோட்டி.ஆனால் இந்திரன் எந்தப் போருக்கும் செல்லாமல் புறமுதுகிட்டு ஓடுபவன்.ஆனால்,மாதலி, ராமனுக்காக தேரோட்ட வந்த போது, கம்பீரமாக முன்புறமாக தேரோட்டினான்)மாதலி, ராமனுக்காக முன்புறமாக தேரோட்ட, மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரியாக அம்பு மழை எய்த,பத்துத் தலைகள் ஒவ்வொன்றாக அறுந்து, அறுந்து விழச் செய்தவன் என் தலைவன்.அவன் இங்கு வரக்காணேன்.மலரும் பூக்களின் நறுமணம் கமழும் சோலையில் , உன் காதலியுடன் வாழும் குயிலே, என் கரிய மாணிக்கம் கண்ணன் இங்கு வருமாறு கூவுவாயாக

Saturday, February 24, 2018

42- மன்னு பெரும்புகழ் மாதவன்

(இப்போது குயில் விது தூது.தன்னைப்போல குயிலுக்கும் காதல் நோய் பிடித்திருக்கக் கூடும் எனவே அது தன் மனம் உணர்ந்து தூது செல்லக்கூடும் என குயிலை தூதுவிடுகிறார்)

மன்னு பெரும்புகழ் மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
 தன்னை உகந்தது காரண மாக என்
சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பெனில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து
விரந்தேன் பவளவா யான்வரக் கூவாய்

மன்னு பெரும்புகழ் மாதவன்-நிலைத்த பெரும் புகழையுடைய மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை-பெருமை கொண்ட மணிவண்ணன் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த கிரீடம் அணிந்தவனை
உகந்தது காரணமாக- நான் விரும்பியது காரணமாக
என் சங்கிழக்கும் வழ்க்குண்டே-என் வளையல்களை இழக்கும் வழக்கு உண்டா (இது நியாயமா)
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி-புன்னை.குருக்கத்தி,கோங்கு,செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கும்
பொதும்பெனில் வாழும் குயிலே-சோலையினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து-இரவும், பகலும் விடாமல் இருந்து
விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்-பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களைக் கொண்டவாயன் சீக்கிரம் என்னை வந்து சேர கூறுவாயாக

நீடித்துநிற்கும் புகழுடையோன் மாதவன்.பெரும் பெருமையைக் கொண்ட மணிவண்ணன்.மணிமுடி தரித்த மன்னன்.நான் அவனை விரும்பிய ஒரே காரணத்தால், என் சங்கு வளையல்களை இழப்பது நியாயமா?(தலைவனைப் பிரிந்த காரணத்தால், உடல் மெலிந்து,இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்தனவாம்)புன்னை,குருக்கத்தி,கோங்கு, செருந்தி மரங்கள் நிறைந்த சோலையில் வாழும் குயிலே, இரவும், பகலும் என்னுடனே இருந்தௌ, பவளத்தைப் போன்ர சிவந்த இதழ்களைக் கொண்டவன் என்னை விரைவில் வந்து சேருமாறு கூவிடு

Friday, February 23, 2018

41- ஊடல் கூடலுணர்தல் புணர்தலை

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறையுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே

ஊடல் கூடல் உணர்தல்- கண்ணனுடனான ஊடலும், அதன் பின்னால் கூடலும் இன்பத்தை உணர்தலும்
புணர்தலை- பின்னர் புணர்தலும்
நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர்-நெடுங்காலம் நிலைத்து நின்ற நிறைந்த புகழுடைய ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய-கூடல் விளையாட்டில் அழகியகூந்தலையுடைய கோதை கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே- இந்தப் பத்துப் பாடலையும் பாடும் வல்லவர்க்கு இல்லை பாவம்

முதலில், செல்லமான சண்டைகள்,சமாதானம் பின் புணர்தல்.பிரியாமல் நெடுங்காலம் நிலைத்துக் கண்ணனுடன் நின்ற ஆய்ச்சியர் விளையாடும் கூடல் விளையாட்டை  வைத்து அழகிய கூந்தலையுடைய கோதையின் , இந்தப் பத்துப் பாடல்களை பாடும் வல்லமை பெற்றோருக்கு இல்லை பாவம் (அனைத்தும் புண்ணியமே)

Thursday, February 22, 2018

40-பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்

பழகு நான் மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தேம்
அழகனாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார்வரில் கூடிடு கூடலே 

பழகு நான் மறையின் பொருளாய் - எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் உட்பொருளானவன்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த என் அழகனார்-மதநீர் ஒழுகும் யானையை வேதனையில் இருந்து காத்தவன் என் அழகனார்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள்-அழகு மிக்க ஆய்ச்சியினர் சிந்தனையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே-கலந்து குழந்தவன் வருவானெனில் கூடிடு கூடலே

எல்லோரின் பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் ௐம் என்ற பிரணவத்தின் உட்பொருளானவன்/ மதநீர் ஒழுகிய யானையினை வேதனையிலிருந்து காத்து துன்பம் நீக்கியவன் என் அழகனார்.அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள் கலந்து, குழைந்து இரக்கம் கொண்டு அருளுபவன், இளமையானவன், அழகானவன் ர்ன்னைத் தேடி வருவானாயின் கூடிடு கூடலே

39- கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று

கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நிலனும் அடி யென்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று-சிறியவனாக, குள்ளனாக உருவெடுத்து
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்-பண்டைய காலத்தில் மாவலியின் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன்-இந்த அண்டம் முழுதும் நிலத்தையும் ஒன்றச் செய்து தனது காலடி மூலம் தனதாக்கிக் கொண்டவன்
வரில் கூடிடு கூடலே- என்னைத் தேடி வருவானா? கூடிடு கூடலே

சிறியவனாக, குள்ளனாக உருவெடுத்து, முந்தைய காலத்தில் மாவலி சக்கரவர்த்தியின் வேள்வியில் அண்டமும்,நிலமும் தன் காலடிகளால் ஒன்றச் செய்து தனதாக்கிக் கொண்டவன் , என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே

38-ஆவலன்புட யார்தம் மனத்தன்றி

ஆவலன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்வரை  சூழ்துவ ராபதிக்
காவ லங்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே

ஆவலும் அன்பும் உடையார்தம் மனத்தன்றி-ஆவலும், அன்பும் உடையவர்கள் மனத்திலன்றி
மேவலன்- மேவு செய்யாதவன் (வேறு எங்கும் இல்லாதவன்)
விரைசூழ் துவாராபதிக் கோவலன்-கன்றுமேய்த்து விளையாடும் ஆயர் குலத் தலைவன்
வரில் கூடிடு கூடலே=வருவார் எனில் கூடிடு கூடலே

கண்ணன் தன் மீது அன்புடையாரிடம் ஆவலுடன் மனத்தில் இருப்பான்.அவனுக்கு தங்குமிடம் அதுவே! கன்று மேய்த்து விளையாடும் ஆயர் குலத்தலைவன் என்னிடம் வருவானெனில் கூடிடு கூடலே

37- அன்றின்னாதன செய்சிசு பாலனும்

அன்றின்னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீளமரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே

அன்று இன்னாதன செய்த சிசுபாலனும்- அன்று செய்யத் தகாத செயல்களைச் செய்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்-மருத மர வடிவில் வழி மறித்து நின்ற நளகுபாரன்,மாணிக்ரீவனும், எருது வடிவில் நின்ற அரிஷ்டாகரனும், கொக்கு வடிவ பகாசுரனும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ-கண்ணனின் வெற்றிதரும் வேலால் கஞ்சனும் வீழ
மும் கொன்றவன்-இவர்கள் யாவரையும் முன் நின்று கொன்றவன்
வரில் கூடிடு கூடலே-வருவார் எனில் நீ கூடிடு கூடலே

(மாபெரும் சபையில் கிருஷ்ணரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியவன் சிசுபாலன்)தன்னை இகழ்ந்த சிசுபாலனை , நூறு பிழைகள் பொறுத்தபின் கிருஷ்ணன் வதம் செய்தான்.
அடுத்து, நளகுபாரன்,மாணிக்ரீவன் இருவரும் மருத மரங்களாக சாபம் பெற்றவர்கள்.கிருஷ்ணரால் சாப விமோசனம் பெற்றவர்கள்
எரூது வடிவில் வந்த அரிஷ்டாசுரன்...ஒரு கிராமத்தையே வெகுவாகத் துன்புறுத்த கிருஷ்ணர் அவனை வதைத்தார்
கொக்கு வடிவில் வந்த பகாசுரனை அழித்தார்
அப்படிப்பட்ட கண்ணன் என்னைக் கூட வருவாரா என கூடிடு கூடலே

36- அற்றவன் மருதம் முறிய நடை

அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வங்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக மும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே

அற்றவன் மருதம்-மென்பட்டைகள் அற்ற வல்லமை மிக்க மருத மரங்கள்
முறிய நடை கற்றவன்-முறிய நடை கற்றவன்
கஞ்சனை  வஞ்சனையினால் செற்றவன்- தாய்மாமன் கம்சனை வஞ்சனையினால் திறமையாக வென்றவன்
திகழும் மதுரைப்பதி கொற்றவன் -வட மதுரையின் அதிபதியாகிய அரசன்
வரில் கூடிடு கூடலே- என்னை வந்து சேருவார் எனில் கூடிடு கூடலே

வலைமை மிக்க மரப்பட்டைகள் கொண்ட மருத மரப்பட்டைகள் முறிய நடை பயின்றவன், மாமன் கம்சனை வென்றவன்.வடமதுரைக்கு அதிபதி என்னை வந்து சேருவார் எனில் கூடிடு கூடலே

(குபேரனின் பிள்ளைகளான நளகுபாரன்,மாணிக்ரீவன், பெண்களுடன் , சற்றும் வெட்கமின்றி நிர்வாணமாக ஆற்றில் குளித்ததால், மருத மரங்களாக மாறும் சபதம் பெற்றனர்.கண்ணன் குழந்தையாக இருந்த போது , கட்டப்பட்டிருந்த உரல், மருத மரத்தால் செய்யப்பட்டது.அதை, இழுத்து, இழுத்து நடை பயின்று, மரத்தை முறித்ததும் அவர்கள் சாப விமோசனம் பெற்றனர்) 

35- மாடமாளிகை சூழ்

மாட மாளிகை  சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூட மாகில் நீ கூடிடு கூடலே.

மாட மாளிகை சூழ் மதுரைப்பதி- மாட மாளிகைகள் சூழ்ந்த மதுராபதியின் வேந்தன்
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு- நம்மை நாடி நம் தெருவில் வருகையில்
ஓடை மாமத யானை உதைத்தவன்-மதம் பிடித்து (நம்மை நாடி வந்த) ஓடி வந்த யானையை உதைத்தவன்
கூடுமாகில்-என்னை வந்து கூடுவான் எனில்
நீ கூடிடு கூடலே- நீ கூடிடு கூடலே

மாடமாளிகைகள் சூழ்ந்த மதுரா நகரம்(வடக்கிலுள்ளது) அதிபதி வேந்தன் நம்மை நாடி தெருவில் வருகையில் மதம் பிடித்து ஓடிவந்த குவலிய பீடம் என்ற யானையை எட்டி உதைத்து அடக்கியவன் என்னை வந்து கூடுவான் எனில் கூடிடு கூடலே

(மதுரா, கண்ணன் பிறந்த ஊராகக் கருதப்படுகிறது.கண்ணன் நம்மை நாடி தெருவில் வருகின்றானாம்.எதற்கு எனில், நம்மைத் துரத்தும் மதயானையிடமிருந்து நம்மைக் காக்க)

Wednesday, February 21, 2018

34- ஆய்ச்சிமார்களு மாயரு மஞ்சிட

ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்தனார்வரில் கூடிடு கூடலே

ஆய்ச்சிமார்களும்- ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களும்
ஆயரும் அஞ்சிட-ஆயர் குலத்தைச் சேர்ந்த ஆண்களும் அஞ்சும்படி
பூத்தநீள் கடம்பு ஏறி- பூக்களுடன் உயரமாய் இருந்த கடம்ப மரமேறி
புகப் பாய்ந்து-நீரில் உட்புகப் பாய்ந்து குதித்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய-காளியன் என்ற நாகத்தின் மீது ஏறி நடனம் ஆடிய
கூத்தனார்வரில்- கூத்தனாருடன்
கூடிடு கூடலே- (நான் சேருவேனா ) கூடிடு நீ கூடலே

ஆயர்குலப் பெண்களும், ஆண்களும் அஞ்சும் படி, பூக்கள் நிறைந்த உயர்ந்த கடம்ப மரம் ஏறி, நீரில் தாவி குதித்து, அதன் உள் புகுந்து,பாய்ந்து, காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய கூத்தனார் என கூடிடு கூடலே

(யாரோ ஒருவரை, குளத்தில் இருந்த பாம்பு பிடிக்க, அதைக் கண்ணனிடம் ஒருவர் சொல்ல, உடன் கடம்ப மரம் ஏறி அங்கிருந்து குளத்தில் பாய்ந்து, குதித்து காளிங்கன் என்ற பாம்பை அடக்கி, அதன் மீது நடனம் ஆடியவர் கண்ணன்) 

33- பூம கன் புகழ் வானவர்

பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன் அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே

பூ மகன் புகழ்- பூவில் பிறந்த பிரம்மாவும் புகழும்
வானவர் போற்றுதர் காமகன்-வானவர் போற்றுதற்கும் உரிய காட்டு தெய்வமான திருமால்
அணி வாள் நுதல்- ஒளிரும் அழகான நெற்றி கொண்ட
தேவகி மா மகன்- தேவகியின் சிறந்த மகன்
மிகு சீர் வசுதேவர்தம்-மிகுந்த சீரும் சிறப்பும் மிக்க வசுதேவரின்
கோமகன்-தலைவன் (மகன்)
வரில்- வருவார் எனில்
கூடிடு கூடலே - நீ கூடிடு கூடலே

பூமியிலே பிறந்த பிரம்மாவும் புகழும்,வானவரும் போற்றும் தெய்வமான திருமால், அழகிய நெற்றி கொண்ட தேவகியின் சிறந்த மகன், சீரும் ,சிறப்பும் மிக்க வசுதேவன் மகன் என்னுடன் சேருவாரெனில் கூடிடு கூடலே 

32- காட்டில் வேங்கடம்

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்ரி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே

காட்டி வேங்கடம்- காட்டில் உள்ள திருவேங்கட மலையிலும்
கண்ணபுரநகர்- (நகரில் உள்ள) கண்ணபுரத்திலும்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்-எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடிகொன்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன்
ஓட்டாரா வந்து என் கைப்பற்றி- ஓடி வந்து என் கைப்பற்றி
தன்னோடும் கூட்டுமாகில்-தன்னோடு என்னை அணைத்துக் கொள்வானாகில்
நீ கூடிடு  கூடலெ- நீ கூடிடு கூடலே

காட்டில் உள்ள திருவேங்கடத்திலும் (திருப்பதி),நகரத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திலும் எவ்வித வருத்தமும் இன்றி, மகிழ்ந்து குடிகொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன் ஓடி வந்து,என் கைப்பற்றி, தன்னை என்னோடு அணைத்துக் கொள்வானாகில் கூடிடு கூடலே

31- தெள்ளியார் பலர்

(31 முதல் 40 வரை நான் காம்  பத்து.இதில் கண்ணனுடன் மணம் நடக்குமா,நடக்காதா என கூடல் பார்க்கிறாள் கோதை.
 மனதில் நினைப்பது நடக்குமா இல்லையா என குறி கேட்கும் பழக்கம், சோழிகளைப் போட்டுப் பார்க்கும் வழக்கம்,  பூ பாட்டு பார்க்கும் வழக்கம் ஜோதிடம் பார்க்கும் வழக்கம் எல்லாம் மக்களிடம் தொன்றுத் தொட்டு உண்டு.அதில் ஒன்றுகூடல் என்ற ஒன்று.ஆற்று மணல் மீது அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு வட்டம் வரைவது.வட்டம் சரியாகக் கூடினால் நினைப்பது நடக்கும் என நம்பிக்கை)

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே

தெள்ளியார் பலர்-தெளிந்த மனமுடையோர் பலர்
கை தொழும் தேவனார்-கை தொழும் தேவன்
வள்ளல்மால் இரும்சோலை மணாளனார்-பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலான திருமால் இருக்கும் சோலையான அழகர் கோயில் மணாளன்
பள்ளி கொள்ளும் இடத்து-அவர் உறங்கும் இடத்தில்
அடி கொட்டிடக் கொள்ளுமாகில்-அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அருள் கிடைக்குமேயானால்
நீ கூடிடு கூடலே- நீ கூடிடு கூடலே

தெளிந்த மனமுடையோருக்கு , வேண்டும் போது, திருமால் பள்ளிகொண்டுள்ள அழகர்மலை மணாளன் (கள்ளழகர்) வாரி வழங்குவான்.அதூபோல அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அருள் கிடைக்குமா? (என கூடள் பார்க்கிறாள்)


Tuesday, February 20, 2018

30-கன்னிய ரோடெங்கள் நம்பி

கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவனோடு
வைகுந்தம் புக்கிருப்பாரே

கன்னியரோடு எங்கள் நம்பி - கன்னியர்களுடன் எங்கள் நம்பி நாராயணன்
கரியபிரான் விளையாட்டை-கருமை நிறக் கண்ணன் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த-பொன் வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன் பட்டன் கோதை-வில்லிபுத்தூர் தலைவன் (பெரியாழ்வார்) கோதை
இன்னிசையால் சொன்ன மாலை-இன்னிசையால் பாடிய பாடல்
இரு ஐந்தும் வல்லவர் தாம் போய்- பத்தும் பாடும் வல்லவர்கள்
மன்னிய மாதவனோடு-என்றும் நிலைபெற்ற மாதவனோடு
வைகுந்தம் புக்கிருப்பாரே-வைகுந்தத்தில் புகுந்திருப்பர்

கன்னிப் பெண்களுடன், நம்பி நாராயணன்,கருமை நிறக் கண்ணன் விளையாடிய , இது போன்ற விளையாட்டை, பொன்வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த வில்லிப்புத்தூர் பட்டன் பெரியாழ்வார் மகள் கோதை, இன்னிசைபாக்களாகச் சொன்ன இப்பத்து பாடல்களையும் பாடுபவர்கள் என்றும் நிலையாக மாதவனுடன் வைகுந்தத்தில் புகுவர்.

29- கஞ்சன் வலைவைத்த வன்று

கஞ்சன் வலைவைத்த வன்று
காருரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்ற இக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சியா லுண்ட
மசிமையி லீ! கூறை தாராய்

கஞ்சன் வலை வைத்த அன்று- கஞ்சன் என்ற உன் மாமன் வைத்த வலையில் அன்று
கார் இருள் எல்லில் பிழைத்து-அடர்ந்த கருமையான இருளில் தப்பித்து
நின்ற இக்கன்னிய ரோமை- நீரில் நின்ற இந்தக் கன்னியர்களை
நெஞ்சம் துக்கம் செய்யப் போந்தாய்-எங்கள் மனம் துக்கம் கொள்ளவா நீ வந்தாய்
ஆணாட விட்டிட்டு இருக்கும்-ஆண்பிள்ளைதானே என விட்டு விட்டு
அஞ்ச உரைப்பாள் அசோதை-உன்னை பயப்படும் படி அதட்ட மாட்டாள் உன் தாய் யசோதை
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட- உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியிடம் பால் உண்ட
மகிமை இலீ! கூறைதாராய்- பெருமை இல்லாதவனே! எங்கள் உடைகளைத் தந்து விடு

உன் மாமன் கம்சன் உன்னை கொல்ல வைத்த வலையிலிருந்து, அடர்ந்த இருளில் தப்பித்து வந்தவனே! இப்படி நீரில் நின்ற கன்னியர்களின் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்வதற்காகவா வந்தாய்? ஆண் பிள்ளைதானே, என உன் தாய் யசோதையும், எங்கள் எதிரே உன்னை கண்டிப்பதாய் நடந்தாலும், அது உண்மையில்லை என நாங்கள் எண்ணுகிறோம்.உன்னை வஞ்சகமாகக் கொலை செய்ய வந்த அரக்கியிடம் பால் உண்டே அவளைக் கொன்ற பெருமை இல்லாதவனே! எங்கள் உடைகளைத் தந்து விடு.

(ஆண்டாளின் பாட்டில் ஒரு யதார்த்தம் இருப்பதால், மனதிற்கு நெருக்கம் இருக்கிறது.கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி தாய் உருவம் கொண்டு, அவள் மார்பகங்களில் நஞ்சு தடவி, கண்ணனுக்கு பால் ஊட்ட, அதை அறிந்த கண்ணன், பாலையும், விஷத்தையும் உண்டு,அந்த அரக்கியின் உயிரையும் எடுக்கிறான்) 

Monday, February 19, 2018

28-மாமியார் மக்களே யல்லோம்

மாமியார் மக்களே யல்லோம்
மற்றுமிங்  கெல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சாலச்
சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய்

மாமியார் மக்களே யல்லோம்- உனது முறைப்பெண்களான அத்தை பிள்ளைங்க மட்டுமல்ல
மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்-இங்கு எல்லோரும் வந்தாங்க.
தூமலர்க் கண்கள் வளர-வண்டுகூட வந்தமராத தூய்மையான மலர்ப் போன்ற கண்கள் வளர
தொல்லையிராத்துயில்வோனே- பகல் முழுதும் குறும்புத்தங்களால் தொல்லை செய்துவிட்டு இரவில் தூங்குபவனே
சேமம் மேல் அன்றி இது-இது உனக்கு பாதுகாப்புத் தரும் செயல் அல்ல.
காலச் சிக்கென நாமிது சொன்னோம்-உனது நலனுக்காக மிக உறுதியாக நாங்கள் சொல்கிறோம்
கோமள ஆயர் கொழுந்தே-மென்மையான ஆயர் கொழுந்தே
குறுந்திடை கூறை பணியாய்-குருந்தை மரத்தின் இடையே உள்ள எம் துணிகளை தந்தருள்க

உனது முறைப்பெண்கள் மட்டுமல்லாது, மற்ற பெண்களும் வந்துள்ளார்கள்.பரிசுத்தமான மலர் போன்ற கண்கள், பகல் முழுதும் குறும்புகளும், சேட்டைகளும் செய்து விட்டு இரவில் கண் வளர தூங்குபவனே!நீ எய்யும் செயல் நல்லது அல்ல.உன் நலத்திற்காக சொல்கிறோம் ஆயர் கொழுந்தே! குருந்த மரத்தின் இடையே உள்ள எங்கள் துணிகளை தந்துவிடுவாயாக

27- நீரிலே நின்றயர்க்கின்றோம்

நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தாய்
ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்கணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந் தேறி யிராதே

நீரிலே நின்று அயர்க்கின்றோம்- தண்ணீரிலேயே நின்றதில் அயர்ந்து விட்டோம்
நீதி அல்லாதன செய்தாய்-(இப்படி உன்னை விரும்புபவர்களை வாட்டுவது நீதி அல்லவே) நீதியல்லாததை நீ செய்தாய்
ஊழி எல்லாமும் உணர்வானே- விதி (உலகத்தின்   அழிவு,அதன் மீள் துவக்கம்) எல்லாம் உணர்ந்தவனே
ஆர்வம் உனக்கே உடையோம்-(எங்களின் சின்ன சின்ன ஆசைகள்,)எங்கள் ஆர்வம் உன்னிடம் மட்டுமே
அம்மனைமார் காணில் ஒட்டார்-இதை மட்டும் எங்க அப்பா, அம்மா பார்த்தாங்க, வீட்டுக்குள்ளே எங்களை விடமாட்டார்கள்
போர விடா எங்கள் பட்டைப்-மீள விடாய் எங்கள் பட்டை
பூங்குருந்து ஏறி யிராதே- பட்டாடைகளை எடுத்து கொண்டு, பூங்குருந்த மரம் ஏறி அமர்ந்து கொண்டு இராதே

ஆடையின்றி நீரிலேயே வெகு நேரம் நின்றதால் கால்கள் அயர்ந்து விட்டன.உன்னை விரும்புபவர்களை நீ இப்படி வாட்டுவது நியாயமா? இப்பொய்கையிலிருந்து எங்கள் கிராமம் வெகு தொலைவில் உள்ளது.விதி(அழிவு/துவக்கம்) ஆகியவற்றை உணர்ந்தவனே! எங்களது எண்ணம் எல்லாம் நீதான்.நீ செய்த செயல்களை ,எங்களது தாய், தந்தையர் பார்த்தால் உன்னை இங்கேயே வர விடமாட்டார்கள்.எங்களது பட்டாடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி அமராமல், ஆடைகளைக் கொடுத்துவிடு

Sunday, February 18, 2018

26- தடத்தவிழ் தாமரைப் பொய்கை

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே றெறிந்தாலே போல
வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லங் கோவே
படிற்றையெல் லாம் தவிர்ந்
தெங்கள் பட்டைப் பணித்தருளாயே

தடித்து அவிழ் தாமரைப் பொய்கைத் தாங்கள்-பொய்கையில் மலர்ந்த பெரிய தாமரையின் தண்டுகளானது
எங்கள் காலைக் கதுவ- எங்கள் கால்களைப் பற்ற
விடத்தேறி எறிந்தாலே போல- விஷம் கொண்ட தேள் கொட்டினாற் போல
வேதனை ஆற்றவும்  பட்டோம்- மிகுந்த வேதனை அடைந்தோம்
குடத்தைஎடுத்தேற விட்டு- குடத்தைத் தலையில் எடுத்து ஏறவிட்டு (கரகம்)
கூத்தாட வல்ல எங்கோவே-கூத்தாட வல்ல எங்கள் அரசரே!
படிற்ரை எல்லாம் தவிர்ந்து-உன் குற்றங்களையெல்லாம் நீ உணர்ந்து
எங்கள் பட்டைப் பணித்தருளாயே- எங்கள் பட்டு ஆடையைக் கொடுத்து அருள்வாயாக

(நீண்ட நேரம் நின்றதால்) பொய்கையில் மலர்ந்துள்ள தண்டுகள் கால்களில் பற்றிக்  கொள்ளும்போது, விஷம் கொண்ட தேள்கள் கொட்டினாற்போல வேதனையாய் இருக்கிறது.குடத்தைத் தலையில் வைத்து (கரகம்) கூத்தாட வல்ல அரசரே!(எங்களது ஆடைகளை எடுத்து வைத்துள்ள) உன் குற்றங்களை நீ உணர்ந்து, எங்கள் பாட்டு ஆடைகளைத் திருப்பித் தருவாயாக!


25- காலைக் கதுவிடு கின்ற

காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி
வேலைப் பிடித்தென்னை மார்கள்
ஓட்டிலென்ன விளை யாட்டோ
கோலச்சிற்றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய்

காலைக் கது விடுகின்ற- காலைப் பற்றுகின்ற
கயலோடு வாளை விரவி-கயல்மீன் களோடு வாளைமீனும் ஒன்று கூடி
வேலைப் பிடித்து எந்தென் ஐ மார்கள்- வேலைப் பிடித்துக் கொண்டு என் தந்தை/அண்ணன்மார்
ஓட்டில் என்ன விளையாட்டோ- உன்னை ஒட விட்டுத் துரத்தினால்(என்னாவாவது)இது என்ன விளையாட்டா
கோலச் சிற்றாடை பலவுங்கொண்டு-அழகிய எங்கள் சிற்றாடைகள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு
நீ ஏறி இராதே- நீ மரத்தின் மீது ஏறி உட்காராதே
கோலங்கரிய பெருமானெ!= கரிய திருமேனியைக் கொண்ட அழகிய பிரானே
குருந்திடைக் கூறைப் பணியாய்-குருந்த மரத்தின் இலையில் வைத்திருக்கும் எங்கள் ஆடைகளைக் கொடுத்துவிடு

(ஆடை இல்லாமல் நீண்ட நேரம் நீரில் நின்றதால்) கயல்  மீன் களோடு, வாளை மீனும் ஒன்று கூடி காலை வந்து பிடிக்கிறது.பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் வந்து சேட்டைப் பண்ணினால், அதைப் பார்த்த்க் கொண்டிருக்கும் எங்களது தந்தை/அண்ணன்மார்கள், வேலை எடுத்துக் கொண்டு உன்னை அடிக்க வருவார்கள்.அதைக் கண்டு நீ ஓடணும்.இதெல்லாம் பார்க்க நன்றாகவா இருக்கும்? (இருக்காது).ஆகவே, இந்த விளையாட்டு வேண்டாம்.அழகான  எங்கள் சிறு ஆடைகளை எடுத்துக் கொண்டுமரத்தின் மீது உட்கார்ந்து இராதே!கரிய அழகிய மேனி கொண்டவனே! குருந்த மரத்தின் கிளைகளில் ஒளித்து வைத்துள்ள எங்களது ஆடைகளைக் கொடுத்துவிடு.

Saturday, February 17, 2018

24- பரக்க விழித்தெங்கும் நோக்கி

பரக்க விழித்தெங்கும் நோக்கிப்.
பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை அழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம்
குருந்திடக் கூறை பணியாய்

பரக்கவிழித்து எங்கும் நோக்கி-நாலு திசையெங்கும் "திரு திரு" என விழித்து நோக்கி
பலர் குடைந்தாடும் சுனையில்- பலர் முங்கி நீராடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்-அடக்கியும் நில்லாமல் கண்ணீர்
அலமருகின்றவா பாராய்-தளும்புகின்றன பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்-கொஞ்சமும் இரக்க மில்லாதவனே!
இலங்கை அழித்த பிரானே-இலங்கையை அழித்த எம்பிரானே!
குரக்கரசாவது அறிந்தோம்- குரங்குகளுக்கு எல்லாம் தலைவன் ஆனவனே
குருந்து இடை கூறை பணியாய்-குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு

அரக்க பரக்க நான் கு   திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் அடக்கியும் முடியாமல் இருப்பதைப் பார்.(அதைக் கண்டும்) சிறிதும் இரக்கமில்லாமல், வேடிக்கைப் பார்ப்பவனே!இலங்கையை அழித்த எம்பிரானே! குரங்குகளின் தலைவன் ஆனவனே! குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு

23-எல்லே யீதென்ன இளமை

எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணிலொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமேபோவோம்
பட்டைப் பணித்தருளாயே

எல்லே இது என்ன இளமை- ஏலே! இது என்ன சிறுபிள்ளத்தனம்
எம்மனைமார் காணில் ஒட்டார்-எங்கள் வீட்டு மக்கள் இதைப் பார்த்தால் இங்கே விடமாட்டார்கள்
பொல்லாங்கு இதுவென்று கருதாய்-இது போக்கிரித்தனம் என்று ஏன் எண்ண மறுக்கிறாய்
பூங்குருந்து ஏறி இருத்தி- குருந்த மரம் ஏறி உட்கார்ந்து இருப்பவனே!
வில்லால் இலங்கை அழித்தாய்-வில்லினால் இலங்கையை அழித்தாய்.
நீ வேண்டியது எல்லாம் தருவோம்- நீ கேட்டது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்-யாரும் பார்க்கும்முன்  வீ  ட்டிற்குப் போய்விடுவோம்
பட்டைப் பணித்தருளாயே- எங்கள் பட்டாடைகளைத் தந்து அருள்வாயாக

இது என்ன சிறுபிள்ளைத்தனமான செயல்.என் வீட்டு மக்கள் பார்த்தால், மீண்டும் எங்களை இங்கே வர விடமாட்டார்கள்.நீ செய்யும் செயல் போக்கிரித்தனமனது என் நீ உணரவில்லையா?குருந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து இருப்பவ னே!வில்லால் இலங்கையை அழைத்தவனே!நீ கேட்டது எல்லாம் தருவோம்.எங்கள் பட்டாடைகளைத் தந்து அருள்வாயாக! யாரும் பார்க்கும் முன் எங்கள் வீடு செல்ல அருள்வாயாக(என் கிறார்)

Friday, February 16, 2018

22- இதுவென் புகுந்ததிங்க்கந்தோ

இதுவென் புகுந்ததெங்கந்தோ
இப்பொய்கைக் கெவ்வாறுவந்தாய்
மதுவின் துழாயமுடி மாலே
மாயனே எங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய்
குருந்திடைக் கூறை பணியாய்

இது என் புகுந்தது இங்கு- இது இங்கு ஏன் இப்போது வந்தது
அந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்-அந்தோ!இந்தக் குளத்திற்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாயமுடி மாலே-தேன்  ததும்பும் துளசி மலர்கள் முடியில் சூடியவனே
மாயனே- மாயங்கள் செய்பவனே
எங்கள் அமுதே- எங்களுக்கு அமுதம் போன்றவனே
விதி இன்மையாலது மாட்டோம்-பெண் உடைகள் அணியாமல்,ஆண்கள்  முன் வருதல் விதி அல்ல.அதை நாங்கள் செய்ய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய்-பல திறமை பெற்ற வல்லவனே
விரையேல்-(உடை இல்லாமல் இருக்கிறோம்) அவசரப்பட்டு  வந்துவிடாதே
குதி கொண்டரவில் நடித்தாய்-உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடியவனே
குருந்திடைக் கூறை பணியாய்-குருந்த மரத்தின் இடையே வைத்திருக்கும் எம் துணிகளைக் கொடுத்துவிட்டுப் போ

(குருந்த மரம் ஒரு சிறுவகை மரம்.காட்டு எலுமிச்சை வகை.குளத்தின் அருகே வேர் பிடிச்சு மண் அரிக்காமல் இருக்க இந்த மரம் உதவுமாம்)

குளிக்கும் குளத்தருகே எப்படி வந்தாய்?தேன் ததும்பும் துளசியை அணிந்தவனே!எங்கள் அமுதே!(இப்படியெல்லாம் கொஞ்சி, கெஞ்சி துணையை வாங்கப் பார்க்கின்றனர்) உடை இன்றி பெண்கள் ஆண்கள் முன் வரலாமா? அதனால் நாங்கள் வரமாட்டோம்.எங்களிடம் உடை இல்லை.அவசரப்பட்டு என் முன்னே வந்து விடாதே!உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடுபவனே! குருந்தை மரத்தில் ஒளித்து வைத்திருக்கும் எங்களது உடைகளைக் கொடுத்துவிடு (என் கிறார்)


21- கோழியழைப்பதன் முன்னம்//

(21 முதல் 30 வரையிலான பாடல்களில், ஆயர் குலப் பெண்களின் துணிகளைத் திருடி அவர்களிடம் குறும்பு செய்யும் பாவனைகள் கொண்டவை.அதிகாலை குளிக்கச் சென்ற பெண்கள் அறியாமல் அவர்கள் குளிக்கின்ற நேரம் அவர்கள் துணிகளை திருடி வைத்துக் கொண்டு குறும்பு செய்யும் கண்ணனிடம் பெண்கள் தங்கள் உடைகளை வேண்டிக் கேட்கின்றார்கள்)

கோழியழைப்பதன் முன்னம்..
குடைந்து நீராடுவான் போந்தோம்- வெள்ளென எழுந்து குளத்தில் நீச்சடித்து நீராட வந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்-கதிரவன் எழுந்தான்
அரவணை மேல் பள்ளி கொண்டாய்- பாம்பின் மீது படுத்திருப்பவனே
ஏழமை ஆற்றவும் பட்டோம்-இல்லாமையை ஆற்ற கடமைப் பட்டோம்
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-இனி எப்போதும் பொய்கைக்கு வர மாட்டோம்
தோழியும் நானும் தொழுதோம்-நானும் என் தோழியும் உன்னை வேண்டி கும்பிட்டுக் கேட்கிறோம்
துகிலைபணித்தருளாயே- எங்கள் துணியை தந்துவிடு

கோழி கூவும் முன்னர்குளத்திற்குச் சென்று நன்கு முங்கி முங்கிக் குளிக்கச் சென்றோம்.கதிரவனும் உதித்து விட்டான்.பாம்புமீது படுத்தவனே, உன் சேட்டையால், துணிகளை இழந்து குளத்தைவிட்டு வெளியே வரத் தவிக்கிறோம்.நானும் , என் தோழியும் உன்னை கையெடுத்து கும்பிட்டு வேண்டுகிறோம்., இனி குளத்துப் பக்கமே வரமாட்டோம்.எங்களது துணிகளை மட்டும் தந்துவிடு.  

Thursday, February 15, 2018

20-சீதைவாயமுதமுண்டாய்

சீதைவாயமுதமுண்டாய்! எங்கள்
சிற்றில்நீ சிதையேல்! என்று
வீதிவாய் விளையாடுமாயர்
சிறுமியர் மழலைச் சொல்லை
வேதவாய்த் தொழிலாளர்கள்வாழ் வில்லி
புத்தூர் மண்விட்டு சித்தன்றன்
கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறை
வின்றி வைகுந்தம் சேர்வரே.

சீதைவாய் அமுதம் உண்டாய்- சீதை வாய் முத்தம் எச்சில் உண்டவனே
எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-எங்கள் சிறு மண் வீட்டை நீ சிதைக்காதே என்று
வீதிவாய் விளையாடும் ஆயர்- வீதியில் விளையாடும் ஆயர்
சிறுமியர் மழலைச் சொல்லை-சிறுமியர்ஒரு  மழலைச் சொல்லை
வேதவாய்த் தொழிலாளர்கள் வாழ்-வேதம் ஓதும் தொழில் கொண்டவர்கள் வாழும்
வில்லிப்புத்தூர் மண் விட்டுச் சித்தன் தன்-வில்லிப்புத்தூர் விஷ்ணு சித்தனின்
கோதைவாய்த் தமிழ் வல்லவர்-கோதை சொன்ன தமிழ் பாடுபவர்கள்
குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-ஒரு குறையுமில்லாமல் வைகுந்தம் சேர்வர்

சீதையின் மணவாளனே! எங்களது சிறிய மணல் வீட்டை சிதைக்காதே, என வீதியில் விளையாடும் ஆயர் குல சிறுமிகள் பேசிய மழலைச் சொற்களை, வேதத்தைத் தொழிலாகக் கொண்ட தொழிலாளர்கள் உள்ள வில்லிபுத்தூரில் உள்ள விஷ்ணுசித்தன் கோதை, தன் வாயால் தமிழ் பாக்களால் பாடுபவர்கள் எந்தக் குறையுமின்றி வாழ்ந்து வைகுந்த வாசன் அடி சேருவார்காள்.

இறைவன் மிகப் பெரியவன் என்பதை உணர்ந்து தன்னைச் சாதாரண மாடு மேய்க்கும் சிறுமியாகக் கருதி , அந்த பால்ய பருவத்தில் மணல் வீடு கட்டி விளையாடும்போது அதிலே கண்ணனையும் சேர்த்துக் கொண்டு கண்ணன் செய்யும் குறும்புத் தனங்களுக்காக இந்தப் பத்துப் பாடல் :) அடுக்குமாடி வீடுகள் வந்த பிறகு இது போன்ற மணல் வீடு கட்டி விளையாடுதல் எல்லாம் இப்படிப் படித்து அறிந்தால்தான் தெரியும் நம் சந்ததிகளுக்கு.. தான் கடவுளைக் காதலிப்பதும் அவனை அடைய நினைப்பதும் மணல் வீடு போல நிலையில்லாத ஆசைதான் எனத் தெரியும் அவளுக்கு..இருப்பினும் அந்தக் கற்பனை  உலகமே அவளுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது ..யதார்த்தம் மூச்சை அடைக்கும் போதெல்லாம் கற்பனை உலகில் தான் தஞ்சம் புக வேண்டி இருக்கிறது.. அந்த ஆசை நிராசை என்றே அவளுக்கும் தெரிந்து இருக்கக்கூடும் . இருந்தாலும் அதைக் கலைச்சுடாதே என்கிறாள் . பிள்ளை மனம் கொண்டவள். கண்ணனைத் தன் சக தோழனாக நினைத்து , அவனோடு உருண்டு புரண்டு விளையாடுவது போன்ற பாவனையே இந்தப் பத்துப் பாடல்கள். 


19- முற்றத்தூடு புகுந்துநின் முகம்

முற்றத்தூடு புகுந்துநின் முகம்
காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாயெம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ  ரெஞ்சொல்லார்

முற்றத்து ஊடு புகுந்து-முற்றத்திலே ஊடாக புகுந்து
நின்முகம் காட்டி புன்முறுவல் செய்து-உன் மகத்தினைக்காட்டி புன்னகை செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்- எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்களது சிந்தனையையும்
சிதைக்கக் கடவையோ கோவிந்தா-சிதைக்கலாமா கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி- முழுவதுமாக மண் இடம் தாவி
விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்-வானம் அளந்து கால் நீட்டி மொத்தமும் அளந்தாய்
எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால்-எங்களைப் பிடித்து உடல்மீது மல்லுக்கட்டி சண்டையிட்டாய்
இந்தப்பக்கம் நின்று அவர் எஞ்சொல்லார்-இதைப் பார்க்கும் என் வீட்டார் என்ன சொல்லுவார்கள்?

முற்றத்தில், நடுவே புகுந்து, உன் முகம் காட்டிப் புன்னகை செய்து, எங்கள் சிறு மணல் வீட்டுடன், எங்களது சிந்தையையும் சிதைக்கும், கோவிந்தா..மண் முழுதுமாக அளந்து,பின் கால் நீட்டி, வானம் அளந்து..மொத்தமும் அளந்தாய்.நாங்கள் கட்டிய வீட்டை இடிக்க நீ வர, அதை நாங்கள் தடுக்க முனைய, எங்களைப் பிடித்து, கட்டிப் புரண்டு சண்டையிட்டாய்,இதைப் பார்க்கும் என் வீட்டினர் என்ன சொல்லுவார்கள்?

Wednesday, February 14, 2018

18- வட்டவாய்ச்சிறு தூதையோடு

வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடு வோங்களைச்
சிற்றலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச்
சக்கரம் கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை
அறிதியே கடல் கண்ணனே!

வட்டவாய்ச் சிறு தூதையோடு- வட்டவடிய வாய் கொண்ட சிறு பொம்மைப் பானையோடு
சிறு சுளகும் மண்ணும் கொண்டு-சிறிய சுளகும்,மணலும் கொண்டு
இட்டமாய் விளையாடுவோம் எங்களை - வைத்து விளையாடும் எங்களுடைய
சிற்றில் ஈடழித்து என் பயன்- சின்ன வீட்டை அழித்து உனக்கு என்ன பயன்
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்-இப்படி அதை தொட்டு, உதைத்து சேதம் செய்கின்றாயே
சுடர்ச் சக்கரம் கையிலேந்தினாய்-ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே-கருப்பட்டியும், கசந்தால் இனிக்காது என அறியாதவனா நீ
கடல் கண்ணனே-கடல் வண்ணம் கொண்ட கண்ணனே!

வட்டவடிவ வாய் கொண்ட சிறு பொம்மைப் பானையுடன், சிறிய சுளகும், மணலும் கொண்டு, வைத்து விளையாடும் எங்களது சின்ன மணல்வீட்டை அழித்து உனக்கு என்ன பயன்?இப்படி அதை தொட்டு, உதைத்து சேதம் செய்கின்றாயே..!ஒலிறும் சக்கரத்தை கையில் ஏந்திய, கடல் வண்ண கண்ணா, கருப்பட்டி கூட கசந்தால் இனிக்காது என தெரிந்தவன் தானே நீ.

(மணலை சுளகு (முறம்) கொண்டு புடைத்து, வரும் நுண்மணலில் கட்டிய மண் வீடாம்)

Tuesday, February 13, 2018

17- பேதநன்கறி வார்களோடிவை

பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலிந் தென்பான்
ஓதமாகடல் வண்ணாஉன் மண
வாட்டிமாரொடு சூழறம்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையலே

பேதநங்கறிவார்களோடு- பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமான உன் செயல்களுக்கு வித்தியாசம் நன்கு அறிந்தவர்களோடு
இவை பேசினால் பெரிதும் சுவை-இவை பேசினால் பெரிதும் சுவையானதாக இருக்கும்
யாது ஒன்றும் அறியாத-ஆனால், சூதுவாது அறியாத
பிள்ளைகளோம் எமை நீ நலிந்து என்ன பயன்-பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்
ஓதமா கடல் வண்ணா- அலை கொண்ட கடல் நிறத்தானே
உன் மணவாட்டிமாரோடு சூழறம்-உன் மனைவிகளின் மீது ஆணை
சேது பந்தம் திருத்தினாய்- அணைக்கட்டினாய்
எங்கள் சிற்றில் வந்த சிதையலே-எங்கள் சிறு வீட்டை சிதைக்காதே

உன்னை அறிந்தவர்கள், உன் பேச்சுக்கும், செயலுக்கும் வித்தியாசம் அறிந்தவர்களோடு, பேசினால்..அது பெரும் சுவையாய் இருக்கும்.அதை விடுத்து,ஒரு விவரமும் அறியா, சூதுவாதற்ற சிறு பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்.கடல்நிர வண்ணனே! சேது அணைகட்டியவனே, உன் மனைவியர் மீது ஆணை, எங்கள் சின்ன மணல் வீடினை சிதைக்காதே

16- முற்றிலாத பிள்ளைகளோம்

முற்றிலாத பிள்ளைகளோம் முலை
போந்திலா தோமை நாடோறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீசிறி
துண்டு திண்ணென நாமது
கற்றிலோம், கடலையடைத் தரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய
வேகா ! எம்மை வாதியேல்

முற்று இலாத பிள்ளைகளோம்- முதிர்ச்சி பெறாத இளம்பிள்ளைகள் நாங்கள்
முலை போந்திலா தோமை நாள்தோறும்-முலைகூட சரியாக வளராத எங்களை நாள் தோறும்
சிறிய இல் மேல் இட்டுக் கொண்டு- நாங்கள் கட்டும் சிறிய வீட்டின் மேல் ஏறிக்கொண்டு
நீசிறிது உண்டு- நீ செய்யும் செயல்கள் சில உண்டு
திண்ணென நாம் அதை கற்றிலோம்-அதை  முறிக்கும் வல்லமை நாங்கள் ஏற்கவில்லை
கடலை அடைந்த அரக்கர் குலங்களை முற்றவும்-கடலை அடைத்து (அணை கட்டி)அரக்கர் குலங்களை முழுமையாக அழிக்கவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய வேகா-பகையை இலங்கைக்குச் சென்று சண்டையிட்டு வென்ற வீரமுடையவனே!(செயலில் வேகமுடையவனே)
எம்மை வாதியேல்- எங்களை துன்புறுத்தாதே!

முலைகூட சரியாக வளரா இளம் பிள்ளைகள் நாம்கள்.அப்படிப்பட்ட நாங்கள் கட்டிய சிறு வீட்டை சிதைக்கும் நோக்கில், நீ செய்யும் செயல்களை முறியடிக்கும் அளவிற்கு வல்லமை இல்லை.கடலில் அணையைக் கட்டி , இலங்கை வரை சென்று அரக்கர் குலத்தை அழித்த வீரம் மிக்கவனெ! செயலில் வேகம் கொண்டவனே! எங்களை துன்புறுத்தாதே!


15- வெள்ளைநுண்மணல்

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்க ளிழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா: கேசவா! உன்
முகத்தன கண்க ளல்லவே!

வெள்ளை நுண்மணல் கொண்டு - வெள்ளிய நுண் கோலப்பொடி கொண்டு
சிறிய இல் விசித்திரப்பட- சிறு வீடு அழகாக ,பார்த்தாலே தனியாகத் தெரியும்படி
வீதிவாய்த் தெள்ளி- வீதியில் நீர் தெளித்து
நாங்கள் இழைத்த கோலம் அழுத்தியாகிலும்-நாங்கள் இட்ட கோலத்தை நீ அழித்து சேட்டை செய்தாலும்
உன்றன்மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால்- உன் மேல் எங்கள் சிந்தனைஓடி உருகவே செய்கின்றதேத் தவிர
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்-வேறு உன் மீது கோபம் இல்லை பார்த்துகொள்
கள்ள மாதவா கேசவா- திருட்டு மாதவா கேசவா
உன் முகத்தின கண்கள் அல்லவே- உன் கண்களால் அள்ளிக் கொண்டால் எங்கள் வீட்டை அழிக்க மனம் வராது

வெள்ளை நுண் கோலப்பொடி கொண்டு, கோலம் போட்டு, சிறிய வீடு அழகாக, வீதியில் நீர் தெளித்து, நாங்கள் பார்த்துப் பார்த்து போட்ட கோலத்தை நீ அழித்து, அழிச்சாட்டியம் செய்தாலும், உன் மீது மட்டுமே மனம் செல்கிறது.உன்னை நினைத்து உருகுகிறது.அதைத்தவிர உன் மீது எங்களுக்குக் கோபம் இல்லை என்பதை உணர்ந்து கொள்வாயாகதிருட்டு கேசவா  மாதவா! (என செல்லமாக திட்டுகிறார்)

Monday, February 12, 2018

14- பெய்யுமா முகில் போல் வண்ணா...

பெய்யுமா முகில் போல்வண்ணா: உன்றன்
பேச்சும் செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திரந் தாங்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்க ளுரைக்கிலோம்.
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையலே

பெய்யுமாமுகில் போல் வண்ணா- மழைபொழிவதற்குமுன் இருக்கும் கருமேகம் போன்ற நிறத்தானே
உன் தன் பேச்சும் செய்கையும்- உனது பேச்சும், சொல்லும்
எங்களை மையலேற்றி மயக்க- எங்களை காதல் போதையேற்றி மயக்கவைக்க
உன் முகம் மாய மந்திரம்கொலோ-உன் முகம்தான் என்ன மாயமந்திரம் செய்ததோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு- உன்னை "நொய் நொய்" என நச்சரிக்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள்
செய்ய தாமரைக்கண்ணினா-தாமரைப் போன்ற கண்களை உடையவனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையலே-எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே

பெய்துவிடுமோ எனும் நிலையில் இருக்கும் மேகம் போன்ற கரும் நிறத்தானே! உன் பேச்சும், செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க வைக்க, உன் முகம் என்ன மாயமந்திரம் செய்ததோ!உன்னை "நொய் நொய்" என நச்சரிக்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள்.உன் மனம் நோகுமாறு நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்.ஆகவே..தாமரைப் போன்ற கண்ணினை உடையவனே! எங்களது சிறிய மண் வீட்டை வந்து சிதைக்காதே!

Saturday, February 10, 2018

13-குண்டுநீருறை கோளரீ



குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள் விடுத் தாய், உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண் மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

குண்டு நீர் உறை கோள் அரி- நீர் நிறைந்த மழைக்காலத்தில் சிங்கக் குட்டியைப் போல ஆலிலையில் துயின்று இருக்கும் அரியே
மதயானை கோள்விடுத்தாய்- முதலையிடம் சிக்கிய யானையைக் காப்பாற்றியவனே
உன்னைக் கண்டு மால் உறும் எங்களைக்-உன்னைக் கண்டு மயக்கமுறும் எங்களைக்
கடைக் கண்களாலிட்டு வாதியேல்-கடைக்கண்களால் பார்த்து துன்புறுத்தாதே
வண்டல் நுண்மணல்- நுண் வண்டல் மணல் கொண்டு
தெள்ளியாம் வளைக் கைகளாற் சிரமப்பட்டோம்-வளையல் அணிந்த எங்கள் கைகளால் சிரமப்பட்டு புடைத்து (கட்டிய)
தெண்டிரைக் கடற் பள்ளியாய்-அலைபாயும் கடல் மீது பள்ளி கொண்டு ள்ள பெருமாளே
எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-எங்கள் சிறிய வீட்டை சிதிக்காதே

மழைக் காலத்தில் நீர் நிறைந்திருக்கும் நீர்நிலையை குண்டு நீர் என் கிறார்

நீர் நிறைந்த மழைக்காலத்தில் சிங்கக்குட்டியைப் போல ஆலிலையில்துயின்று இருக்கும் அரியே!முதலையிடம் இருந்து யானையைக் காப்பாற்றியவனே!உன்னைக் கண்டு மயக்கம் கொள்ளும் எங்களை, உன் கடைக்கண்களால் மட்டுமே பார்த்து துன்புறுத்தாதே!நுண்ணிய வண்டல் மண்ணை மேலும் புடைத்து எடுத்து, எங்கள் வளையல்கள் அனிந்த கரம் கொண்டு பிசைந்து கட்டிய சிறு வீட்டை சிதைத்து விடாதே, அலைபாயும் கடல் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாளே



Friday, February 9, 2018

12- இன்று முற்றும் முதுகுநோவ

இன்று முற்றும் முதுகுநோவ
இருந்திழைத்த இச் சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கமெழாதெம் பாவமே

இன்று முற்றும் முதுகுநோவ-இன்று முழுவதும் முதுகு வலிக்க
இருந்து இழைத்த இச் சிறிய இல் ஐ-இருந்து பார்த்து பார்த்துச் செய்த இந்தச் சிறிய வீட்டை
நன்ற் உம் கண்ணுற நோக்கி-நன்றாக உன் கண்ணால் பார்
நான் கொளும் ஆர்வம்தன்னைத் தணிகிடாய்-நான் கொள்ளும் ஆர்வத்தை நிறைவு செய் (தணித்துவிடு)
அன்று பாலகனாகி ஆல் இலை-அன்று குழ்ந்தையாக ஆகி ஆலிலை
மேல் துயின்ற எம்மாதியாய்-மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்றனுக்கு எங்கள் மேல்-என்றும் உனக்கு எங்கள் மேல்
இரக்கம் எழாதது எம் பாவமே- உனக்கு இரக்கம் எழாதது எங்கள் பாவமே

11 - நாமமாயிரம் மேத்த நின்ற

 நாச்சியார் திருமொழி இரண்டாம் பத்து

(இதில் ,தான் கட்டும் சிறுமணல்வீட்டை இடிக்காதே என்று கண்ணனிடம் வேண்டுகிறாள் கோதை.கண்ணனை தன் தோழனாக நினைத்து செல்ல சண்டையிட்டுக் கொள்கிறாள்)

நாமமாயிர மேத்த நின்ற
நாராயணாநர னேஉன்னை 
மாமிதன் மகனாகப் பெற்றா
லெமக்கு வாதை டஹ்விருமே,
காமன்போதரு கால்மென் றுபங்க்
குனிநாள்கடை பாரித்தோம்
தீமை செய்யும்  சிரீதரா! எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே 

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற - ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்றுகின்ற
நாராயணா நரனே- நாராயணனே நரனே
உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால்-உன்னை மாமி (அத்தை) தன்  மகனாகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே-எங்களுக்குத் துன்பம் நீங்குமே
காமன் போதரு காலமென்று- காமன் வருகின்ற காலமென்று
பங்குனி நாள் கடை பாரித்தோம்-பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா- எங்களை வீடு கட்ட விடாமல் இடையூறாக
எங்கள் சிறு இல் வந்து சிதையிலே-எங்களின் இந்த சிறிய வீட்டை நீ வந்து சிதைக்காதே

ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்று கின்ற நாராயணா..உன்னை என் மாமி மகனாகப் பெற்றால் எனது துன்பம் நீங்குமே!காமன் வரும் காலமென,  பங்குனி நாள் நீவரும் வழியில் கடை விரித்தோம்.எங்களை  வீடு கட்ட விடாது சிறிய வீட்டை வந்து சிதைக்காதே!






.

10- கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனை

கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக்
கழலினை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே.

கருப்புவில் மலர்க்கணைக் காமதெவனை- கரும்பு வில்லும் மலர்கணைகளும் கொண்ட காமதேவன்
கழலினை பணிந்து-அவன் திருவடி பணிந்து
அங்கு ஓர் கரி அலற-அங்கே ஓர் யானை அலற
மருப்பினையொசித்துப்-அதன் தந்தம் ஒடித்து
புள் வாய்பிளந்த- பகாசுரன் என்ற கொக்கு அரக்கன் வாய் பிளந்த
மணிவண்ணனுக்கு என்னை வகுத்திடு என்று-மணிவண்ணனுக்கு என்றே என்னை உரியவள் ஆக்கிவிடு
என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்-மலைபோன்ற மாடங்கள் அழகாகத் தோன்றும்
புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை-வில்லிபுத்தூர்
சான்றோர் விஷ்ணுசித்தன் மகள் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார்-விருப்பமுடன் பாடிய இந்தத் தமிழ் பாமாலையை பாடல் வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-விண்ணகத்தில் இருக்கும் அந்த பரமனடி நலம் பெறுவரே

கரும்பு வில்லும்,மலர்க்கணைகளும் கொண்ட காமதேவனின்  திருவடிகள் பணிந்து ஆங்கோர் யானை அலற,,(ஆங்கோர் யானை அலற என்பது பகாசுரனால் ஏவிவிடப்பட்ட  குவலய பீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்துக் கொன்றவன் கண்ணன்)
பகாசுரன் என்ற கொக்கு அசுரன் வாய் பிளந்த மணிவண்ணனுக்கே  என்னை உரியவள் ஆக்கிவிடு.என்று, மலை போன்ற அழகான மாடங்களை உடைய வில்லி புத்தூர் சான்றோர் விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை விருப்புடன் சொன்ன இந்தப் பாமாலைகளைப் பாடுவோர் விண்ணகத்தில் அந்தப் பரமனின் திருவடி சேர்ந்து
நலம் பெறுவர்

!

9 - தொழுதுமுப் போதுமுன்னடி வணங்கி

தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க 
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,

உழுவதொ ரெருந்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே


தொழுது முப்போதும்- மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது
உன்னடி வணங்கி-உன் திருவடி வணங்கி
தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன்-தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்னனுக்கே-எந்த்க் குறையுமன்றிபாற்கடல் கண்ணனுக்கே
பணிசெய்து வாழப்பெறாவிடில் நான்- பணி செய்து வாழும் பேறு பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்தம் அம்மா வழங்க ஆற்றவும்-அழுதழுது தடுமாறிப்போய் நான் அம்மாவென அரற்ற
அது உனக்கு உறைக்கும் கண்டாய்-மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவிற்கு வலிக்கும்
உழுவ்ழ்தொ ரெருந்தினை நுகங்கொடு பாய்ந்து-உழுகின்ற எருதினை ஏர் பிடித்து நுகங்கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து
ஊட்டமின்றித் துரந்தால் ஒக்கும்- அதற்கு உணவு கொடுக்காது ஒதுக்கியது போல பாவம் வரும்

மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது, உன் திருவடி வணங்கி,தூய்மையான மலர்களை, கள்ளம் கபட இல்லாமல் தூய நல் உள்ளத்தோடு தூவித் தொழுது நோன்பு இருக்கின்றேன்..காமதேவா!
எந்தக் குறையுமின்றி பாற்கடல் கண்ணனுக்கு பணி செய்து மகிழ,அவன் மனைவியாகாவிடில்..நான் அழுது அழுது அம்மாவென அழுவேன்.அந்த வலி உனக்கு உறைக்கும்.
(அந்த வலி எப்படியிருக்குமாம்...உழுகின்ற உழவு மாடுகளை,நுகங்கொண்டே இடித்து துடிக்கவைத்து, அதற்கு உணவும் கொடுக்காமல் இருந்தால் எவ்வளவு பாவமோ..அவ்வளவு பாவம் வர உரைக்குமாம்)


Thursday, February 8, 2018

8 - மாசுடை யுடம்பொடு தலையுலறி

மாசுடை யுடம்பொடு தலையுலறி 
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு,
தேசுடை திறலுடைக் காமதேவா.
 நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் 
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் 
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்.

மாசுடை உடம்போடு- அழுக்கேறிய உடம்புடனும்
தலையுலறி- எண்ணெய்க் கூட தேய்க்காத சரியாகக் கூட வாராத தலையுடனும்
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு-ஒருவேளை உணவு உண்டு மெலிந்த காரணத்தால்சிவந்த இதழ்கள் வெளுத்து
தேக உடை திறல் உடைக் காமதேவா- ஒளி பொருந்திய, காதலர் தேகம் இணைக்கின்ற திறம் பெற்ற காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்-உன்னை நோற்கின்றேன்.என் நோன்பின் நோக்கம் கண்டுகொள்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்-பேசுவது ஒன்று உண்டு இங்கு என் தலைவன்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும் வண்ணம்-என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்-கேசவன் நம்பியின் மனைவியாக்கி அவனுக்கு சேவை செய்வாள்
என்னும் இப்பேறு எனக்கு அருளுண்டாய் - என்னும் பெரும் பேற்றை எனக்கு அருள்வாயாக

அழுக்கேறிய உடல்,எண்ணெய் கூடத் தேய்க்காமல் வாராத தலை, ஒருவேளை மட்டுமே உண்டதால் மெலிந்து, இதழ் வெளுத்து நோன்பு நோற்கிறேன் காமதேவா!ஒளிபொருந்திய , காதலர் தேகம் இணைக்கின்ற திறம் பெற்ற நீ, என் பெண்மையைக் கேசவன் நம்பி தனக்கே உரிமையாக்கும் பேற்றினை எனக்கு அருள்வாயாக

7 - காயுடை நெல்லோடு கரும்பமைத்து

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் 
கட்டி யரிசி யவலமைத்து,
வாயுடை மறையவர் மந்திரத்தால்
 மன்மத னே.உன்னை வணங்குகின்றேன்,
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் 
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறுமென் தடமுலையும் 
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே.

காய் உடை நெல்லோடு கரும்பமைத்து- பச்சை நெல்லோடு கரும்பமைத்து
கட்டி அரிசி அவல் அமைத்து- அதைக் கட்டி சுற்றி அரிசி,அவலும் வைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்- வேதம் ஓதுபவர்கள் சொல்லும் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகிறேன்-மன்மதனே உன்னை வணங்குகிறேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்-உலகளந்த திருவிக்கிரமன்
திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம்- திருக்கைகளால் என்னைத் தொடும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும்-சாய்ந்த என் வயிறும் , பெருத்த கொங்கைகளும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே-கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே புகழ் பெற எனக்கு அருள் செய்துவிடு

மன்மதா! பால் பிடிக்கும் பச்சை நெல்லுடன் கரும்பமைத்து, அத்துடன் அரிசியும், அவலும் வைத்து நன்கு வேதம் ஓதுபவர்கள் சொல்லும் அதே மந்திரங்களால் நானும் உன்னை வணங்குகிறேன்.
மூவுலகிற்கும் அதிபதியான உலகளந்த உத்தமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாய்ந்த என் வயிறும்,பெரிய என் மார்பகங்களும். கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே பெரும் புகழ் அடைய நீ அருள்வாயாக

Wednesday, February 7, 2018

6- உருவுடை யாரிளை யார்கள் நல்லார்

உருவுடை யாரிளை யார்கள்நல்லார் 
ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் 
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் 
கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
 திருந்தவே நோக்கெனக் கருளுகண்டாய்

உருவுடையார் இளையார்கள்- உருவில் இளமையானவர்கள்
நல்லார் ஓத்துவல்லார்களைக் கொண்டு-மறைஓதும் நல்லவர்களைக் கொண்டு
வைகல்- அதிகாலை நேரம்
தெருவிடை எதிர்கொண்டு-உன்னை தெருவினுக்கே வந்து
பங்குனி நாள் திருந்தவே-பங்குனி நாள் முழுதுமே
நோற்கின்றேன் காமதேவா-காமதேவனே! நோன்பு நூற்கிறேன்
கருவுடை முகில்வண்ணன்-மேகத்தின் நிறம் கொண்டவன்
காயாவண்ணன்-காயம் பூ நிற வண்ணன்
கருவிளை போல் வண்ணன்-கருவிளம்பூ போன்ற நிறத்தான்
கமல வண்ண - தாமரை போன்ற முகத்தான்
திருவுடை முகத்தினில்-அவன் முகத்தில் உள்ள
திருக்கண்கள் திருந்தவே-திருக்கண்களால் தெளிவாக
நோக்கெனக் கருளுகண்டாய்-என்னைப் பார்க்கவே அருள் செய்வாயாக

காமதேவனே! உருவில் இளைஞர்களான மறை ஓதும் நல்லவர்களைக் கொண்டு , அதிகாலை நேரம், உன்னை தெருவினுக்கே வந்து பங்குனி நாள் முழுதும் நோன்பு நூற்கிறேன்.மேகத்தின் நிறம் கொண்டவன்,காயம்பூ நிற வண்னன், கருவிளம் பூ நிறத்தான், தாமரை போன்ற முகத்தான், அவன் முகத்திலுள்ள திருக்கண்களால் என்னைத் தெளிவாகப் பார்த்திட அருள் செய்வாயாக! 

5 - வானிடை வாழுமவ் வானவர்க்கு

வானிடை வாழுமவ் வானவர்க்கு 
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
 கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
 உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் 
வாழ்கில்  லேன்கண்டாய் மன்மதனே


 வானிடை வாழும் அவ் வானவர்க்கு - வானத்தில் வசிக்கும் தேவர்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி- வேதம் ஓதுபவர்கள் வேள்வியில் இட்ட வேள்விப் பொருட்களை
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து-காட்டில் திரியும் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப- அதைக் கடந்து செல்வதோ அல்லது முகர்ந்து பார்ப்பதோ செய்வதைப் போல
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று-என் உடம்பும் சங்கு சக்கரம் கொண்ட உத்தமனுக்கென்றே
உன்னித் தெழுந்த என் தடமுலைகள்-விம்பி எழுந்த என் பெரிய கொங்கைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்-சாதாரண மனிதர்களுக்கு என்று பேச்சு வந்தால்
வாழ்கில்லேன் கண்டால் மன்மதனே-வாழவே மாட்டேன் மன்மதனே

தேவர்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களுக்கும், வேதம் ஓதுபவர்கள்
வேள்வியில் இட்ட வேள்விப் பொருட்களை, காட்டில் உலவும் நரி புகுந்து முகர்ந்து பார்ப்பது போல, எனது கொங்கைகள் சங்கு-சக்கரம் கொண்ட உத்தமனுக்காக ஆகும் .அது சாதாரண மனிதர்களுக்கு என்று யாரேனும் சொன்னால் நான் உயிர் வாழ மாட்டேன்

4 - சுவரில் புராணநின் பேரேழுதி

சுவரில் புராணநின் பேரெழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே.

சுவரில் புராணநின் பேரெழுதி - சுவரில் கண்ணனின் பெயரெழுதி
சுறவ நற் கொடிகளும்- மீன் கொடிகளும்
துரங்கங்களும்- குதிரைகளும்
கவரிப் பிணாக்களும்-கவரி கொண்டுசாமரம் வீசும் பெண்களும்
கருப்புவில்லும்-கரும்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா-எல்லாம் உனக்காக வரைந்தேன் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கி- அவரை சிறு வயது முதலில் இருந்தே
என்றும்- என்றும்
ஆதரித் தெழுந்தாவென் தடமுலைகள்-  விரும்பி என் கொங்கைகள்
துவரைப் பிரானுக்கே- துவாரகை மன்னனான கண்ணனுக்கே
சங்கற்பித்து-உரியது
தொழுது வைத்தேன்-என்று வேண்டி வைத்தேன்
எல்லை விதிக்கிற்றியே- இதை விரைவாகச் செய்து என்னை அவருக்கே ஆட்படச் செய்வாயாக



மன்மதனே! சுவரிலே உன் பெயர்களை எழுதி, மீன் கள், குதிரைகள்,மற்றும் சாமரம் வீசும் பெண்கள், கரும்பு வில் என அனைத்தையும் உனக்காகக் காட்டிக் கொடுத்தேன்.இளம்பருவம் முதல் எப்போதும் துவராகாதிபதி கண்ணனை விரும்பி வளர்ந்த என் கொங்கைகள் அவனுக்கே உரியது.அதை விரைவாகச் செய்து என்னை ஆட்கொள்ள வைப்பாயாக

Tuesday, February 6, 2018

3 - மத்தநன் னறுமலர் முருக்கமலர்

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்தமலர்
முருக்கமலர் கொண்டு - (கல்யாண) முருங்கை மலர் கொண்டு
முப்போதும் முன்னாடி வணங்கி(த்)- மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று- உண்மையில்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து- மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை-(நீ  சொன்ன சொல் காப்பாற்றுபவன் எனும் எண்ணத்தை) உனை நெஞ்சிலிருந்து அகற்றி
வைதிடாமே- உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை-மலர்க் கொத்துக் கொண்ட அம்புகள் தொடுத்து
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி- கோவிந்தன் என அதில் பெயரினை எழுதி
வித்தகன்- பல வித்தைகள் கற்றவன்
வேங்கடவாணன் என்னும்- வேங்கடவன் என்ற பெயர் பெற்ற
விளக்கினில் புக என்னை-(என் வாழ்விற்கு வெளிச்சம் தரும்)விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே- எய்து விடேன்

(தனக்குக் கிடைத்த) ஊமத்த மலர், முருங்கை மலர் கொண்டு மூன்று பொழுதும் அவனது திருவடிகளை வணங்கி தொழுதவனை, பொய்யானவன். சொன்ன சொல் தவறியவன் என திட்டிவிடும் முன்னர் பூங்கணையைத் தொடுத்து வேங்கடவனிடம் என்னைப் புக வைத்துவிடு என் கிறார்

(முதல் இரண்டு பாடல்களில் கெஞ்சும் தோரணையில் சொன்னவர், இதில் சற்றே மிரட்டல் பாணியில் சொன்னது ரசிக்க வைக்கிறது)

2 - வெள்ளை நுண் மணற்கொண்டு

பாடல் - 2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே

வெள்ளைநுண் மணற்கொண்டு - வெள்ளைநிறக் கோலப்பொடியைக் கொண்டு
வெள்வரைப்பதன் முன்னம்- வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்னர்
துறை படிந்து - குளத்தின் படித்துறைக்குச் சென்று.
முள்ளுமில்லாச் சுள்ளி எரி மடுத்து-முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை- முயன்று உன்னை
நோற்கின்றேன் காமதேவா-நோன்பு இருக்கின்றேன் காமதேவா
கள் அவிழ்- தேன் வடியும்
பூங்கணை- பூக்களால் செய்யப்பட்ட அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி-கடலின் நிறம் கொண்ட நீலவண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர்- பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு வடிவம் எடுத்து வந்த போது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் பகவென்னை- இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே- எய்து விடேன்


தெருவில் அழகான வெள்ளை நிறக் கோலப்பொடிக் கொண்டு கோலமிட்டு ,வெளிச்சம் வரும் முன் குளத்தின் படித்துறைக்குச் சென்று குளித்து, முட்களற்ற சுள்ளிகளை பொறுக்கி எடுத்து தீ மூட்டி காமதேவா! உன்னை நோற்கின்றேன் (நோன்பு இருக்கின்றேன்).தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு தொடுத்து அதில் கடல் நிறம் கொண்ட நீலவண்ணனின்   பெயர் எழுதி.புள்ளெனவந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை இலக்காகக் கொண்டு அடையுமாறு அதில் என்னையும் வைத்து எய்துவிடேன்

1 - தையொரு திங்கள்

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ  வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வெங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..

பொருள்
================

தையொரு திங்களும்  - தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத்  தூய்மைப்படுத்தி
தரை மண் தலம் இட்டு- குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில்
                                                   இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல்                                                                         கொண்டு (கோலம்)
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து- தெருவில் இட்டு
                                                                           அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா  - காம தேவனே
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி- உன்னைத்                                                                                                           தொழுவதால்
உய்யலாமோ என்று எண்ணி- இந்தத் துன்பத்திலிருந்து
                                                               தப்பிக்கலாமோ என எண்ணி

உன்னையும் உம்பியையும்- உன்னையும் உன் தம்பியான
                                                             சாமனையும்
தொழுதேன்   - தொழுதேன்
வைய்யதோர் தழலுமிழ்- வெப்பமுடைய நெருப்பை உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு  - சக்கரத்தைக் கையில்
                                                        கொண்ட வேங்கடவனுக்கு என்னை  - என்னை
விதிக்கற்றியே- விதித்து விடேன் (அவனுக்கே உரியவள்
                                                                            என்றாக்கி விடேன்)

தை மாதம் முழுவதும் தரையைத் தூய்மைப் படுத்தி. குளிர்ந்த நீர்த் தெளித்த மண்தரையில் மாசி முதல் நாள்..தெருவில் அழகிய கோலமிட்டு அலங்கரித்து , காமதேவனே! உன்னைத் தொழுவதால் , இந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என எண்ணி, உன்னையும், உன் தம்பியுமான சாமனையும் தொழுதேன்.
வெப்பமுடைய நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கு என்னை உரியவள் ஆக்கிவிடு.