Monday, February 19, 2018

27- நீரிலே நின்றயர்க்கின்றோம்

நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தாய்
ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்கணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந் தேறி யிராதே

நீரிலே நின்று அயர்க்கின்றோம்- தண்ணீரிலேயே நின்றதில் அயர்ந்து விட்டோம்
நீதி அல்லாதன செய்தாய்-(இப்படி உன்னை விரும்புபவர்களை வாட்டுவது நீதி அல்லவே) நீதியல்லாததை நீ செய்தாய்
ஊழி எல்லாமும் உணர்வானே- விதி (உலகத்தின்   அழிவு,அதன் மீள் துவக்கம்) எல்லாம் உணர்ந்தவனே
ஆர்வம் உனக்கே உடையோம்-(எங்களின் சின்ன சின்ன ஆசைகள்,)எங்கள் ஆர்வம் உன்னிடம் மட்டுமே
அம்மனைமார் காணில் ஒட்டார்-இதை மட்டும் எங்க அப்பா, அம்மா பார்த்தாங்க, வீட்டுக்குள்ளே எங்களை விடமாட்டார்கள்
போர விடா எங்கள் பட்டைப்-மீள விடாய் எங்கள் பட்டை
பூங்குருந்து ஏறி யிராதே- பட்டாடைகளை எடுத்து கொண்டு, பூங்குருந்த மரம் ஏறி அமர்ந்து கொண்டு இராதே

ஆடையின்றி நீரிலேயே வெகு நேரம் நின்றதால் கால்கள் அயர்ந்து விட்டன.உன்னை விரும்புபவர்களை நீ இப்படி வாட்டுவது நியாயமா? இப்பொய்கையிலிருந்து எங்கள் கிராமம் வெகு தொலைவில் உள்ளது.விதி(அழிவு/துவக்கம்) ஆகியவற்றை உணர்ந்தவனே! எங்களது எண்ணம் எல்லாம் நீதான்.நீ செய்த செயல்களை ,எங்களது தாய், தந்தையர் பார்த்தால் உன்னை இங்கேயே வர விடமாட்டார்கள்.எங்களது பட்டாடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி அமராமல், ஆடைகளைக் கொடுத்துவிடு

No comments:

Post a Comment