Sunday, February 25, 2018

44- மாதலி நேர்முன்பு கோல்கொள்ள மாயன்

மாதலி நேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங்காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங்கேட்டு உன்
காதலி யோடுடன் வாழ்குயி லே! என்
கருமாணிக் கம்வரக் கூவாய்

மாதலி நேர் முன்பு கோல் கொள்ள மாயன்- மாதலி என்பவன் ராமனுக்காக முன்புறமாக தேர் ஓட்ட
இராவணன் மேல் சரமாரி-மாயம் செய்யும் இராவணன் மீது சரமாறி
தாய்தலை அற்று அற்று வீழத் தொடுத்த-(பத்துத் தலைகள்)ஒவ்வொரு தலையாக அறுந்து, அறுந்து வீழ விடாமல் தொடுத்த (அம்பு எய்திய)
தலைவன் வரவெங்குக்காணேன்-என் தலைவன் இங்கு வருவதைக் காணவில்லை
போதலர் காவில் புது மணம் நாறப்-மலரும் பருவத்தில் உள்ள மலர்கள் உள்ள சோலையில் புது மணம் வீச
பொறி வண்டின் காமரங்கேட்டு-உடம்பில் புள்ளிகள் கொண்ட வண்டின் இசைப்பாடல் கேட்டு
உன் காதலியோடு உடன்வாழ் குயிலே-உன் காதலியுடன் வாழ்ந்து வரும் குயிலே
என் கருமாணிக்கம் வரக் கூவாய்_ என் கருநிற மாணிக்கமான கண்ணன் வரக்கூவுவாயாக

(மாதலி., இந்திரனின் தேரோட்டி.ஆனால் இந்திரன் எந்தப் போருக்கும் செல்லாமல் புறமுதுகிட்டு ஓடுபவன்.ஆனால்,மாதலி, ராமனுக்காக தேரோட்ட வந்த போது, கம்பீரமாக முன்புறமாக தேரோட்டினான்)மாதலி, ராமனுக்காக முன்புறமாக தேரோட்ட, மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரியாக அம்பு மழை எய்த,பத்துத் தலைகள் ஒவ்வொன்றாக அறுந்து, அறுந்து விழச் செய்தவன் என் தலைவன்.அவன் இங்கு வரக்காணேன்.மலரும் பூக்களின் நறுமணம் கமழும் சோலையில் , உன் காதலியுடன் வாழும் குயிலே, என் கரிய மாணிக்கம் கண்ணன் இங்கு வருமாறு கூவுவாயாக

No comments:

Post a Comment