Monday, February 26, 2018

48- பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோராசயினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
ஆங்குயிலே! உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவனைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி

பொங்கி பாற்கடல் பள்ளி கொள்வானைப்= பொங்கி எழுந்த பாற்கடலில் அரவணையில் பள்ளிக் கொண்டிருப்பவனைப்
புணர்வதோர் ஆசையினால்- கூடல் செய்கின்ற ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து-என் முலைகள் கிளர்ந்து சூடாகி குதூகலம் கொண்டு
ஆவியை யாகுலஞ் செய்யும்-என் உயிரை துன்புறுத்தும்
ஆங்குயிலே உனக்கென்ன மறைந்துறைவு-அழகிய குயிலே
உனக்கு என்ன மறைவு வாழ்க்கை வேண்டியிருக்கிறது
ஆழியும் சங்குமொண் தண்டும்-சக்கரமும், சங்கும், கதையும்
தங்கிய கையவனை வரக்கூவில் -கையில் கொண்டவனை வரக் கூவுவாயெனில்
நீ சாலத் தருமம் பெறுதி- உனக்கு மிகவும் புண்ணியமாய் இருக்கும்

பொங்கி எழுந்த பாற்கடலில் அரவனையில் பள்ளிக் கொண்டிருப்பவனைக் கூடும் ஆசையால் என் முலைகள் கிளர்ந்து சூடாகி, குதூகலம் கொண்டு என் உயிர துன்புறுத்தும்.அப்படியான நேரத்தில், அழகிய குயிலே உனக்கு மறைவு வாழ்வு என்ன வேண்டியுள்ளது.சக்கரமும், சங்கும், கதையும் கையில் கொண்டவனை ,இங்கு வருமாறு கூவுவாயாயின், உனக்கு மிகவும் புண்ணியமாகும்

No comments:

Post a Comment