Friday, February 16, 2018

22- இதுவென் புகுந்ததிங்க்கந்தோ

இதுவென் புகுந்ததெங்கந்தோ
இப்பொய்கைக் கெவ்வாறுவந்தாய்
மதுவின் துழாயமுடி மாலே
மாயனே எங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய்
குருந்திடைக் கூறை பணியாய்

இது என் புகுந்தது இங்கு- இது இங்கு ஏன் இப்போது வந்தது
அந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்-அந்தோ!இந்தக் குளத்திற்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாயமுடி மாலே-தேன்  ததும்பும் துளசி மலர்கள் முடியில் சூடியவனே
மாயனே- மாயங்கள் செய்பவனே
எங்கள் அமுதே- எங்களுக்கு அமுதம் போன்றவனே
விதி இன்மையாலது மாட்டோம்-பெண் உடைகள் அணியாமல்,ஆண்கள்  முன் வருதல் விதி அல்ல.அதை நாங்கள் செய்ய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய்-பல திறமை பெற்ற வல்லவனே
விரையேல்-(உடை இல்லாமல் இருக்கிறோம்) அவசரப்பட்டு  வந்துவிடாதே
குதி கொண்டரவில் நடித்தாய்-உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடியவனே
குருந்திடைக் கூறை பணியாய்-குருந்த மரத்தின் இடையே வைத்திருக்கும் எம் துணிகளைக் கொடுத்துவிட்டுப் போ

(குருந்த மரம் ஒரு சிறுவகை மரம்.காட்டு எலுமிச்சை வகை.குளத்தின் அருகே வேர் பிடிச்சு மண் அரிக்காமல் இருக்க இந்த மரம் உதவுமாம்)

குளிக்கும் குளத்தருகே எப்படி வந்தாய்?தேன் ததும்பும் துளசியை அணிந்தவனே!எங்கள் அமுதே!(இப்படியெல்லாம் கொஞ்சி, கெஞ்சி துணையை வாங்கப் பார்க்கின்றனர்) உடை இன்றி பெண்கள் ஆண்கள் முன் வரலாமா? அதனால் நாங்கள் வரமாட்டோம்.எங்களிடம் உடை இல்லை.அவசரப்பட்டு என் முன்னே வந்து விடாதே!உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடுபவனே! குருந்தை மரத்தில் ஒளித்து வைத்திருக்கும் எங்களது உடைகளைக் கொடுத்துவிடு (என் கிறார்)


No comments:

Post a Comment