Tuesday, February 27, 2018

51- அன்றுல கம்மளந் தானையுகந்தடி

அன்றுல கம்மளந் தானையுகந்தடி
மைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறமை யறியேன்
என்றுமிக் காவி லிருந் தென்னைத்
தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்

அன்றுலகம் அளந்தானை உகந்து-அன்று உலகம் அளந்தவனை மனதிற்கு உகந்தவனாகக் கொண்டு விரும்பினேன்
அடிமைக்கண் அவன் வலி செய்ய-அவனுக்கு அடிமையாய் இருக்கும் பொருட்டு அவனை விரும்பினால் , அவனோ என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையைத் தந்தான்
தென்றலும் திங்களும் ஊடறுத்து-தென்றலும், நிலவும் என் உயிரின் ஊடே பிளந்து
என்னை நலியும் முறமை யறியேன்-என்னை வதைப்பது என்ன முறையோ நான் அறியேன்
என்றும் இக்காவிலிருந்து என்னைத்-எப்போதும் இந்தச் சோலையிலிருந்து என்னை
தகர்த்தாதே நீயும் குயிலே-நீயும் வதைக்காதே குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்-இன்று நாராயணன் என்னுடன் இணையவர நீ கூவாவிடின்
இங்குத்தை நின்றும் துரப்பன்-இங்கிருந்து உன்னை துரத்திவிடுவேன்

உலகம் அளந்த எம்பெருமானை. மனதிற்கு உகந்தவனாக எண்ணி விரும்பினேன்.அவனுக்கு அடிமையாய்  இருக்க எண்ணினேன்.அவனோ, என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையைத் தா ன் தந்தான்.தென்றலும், நிலவும் என் உயிரை வதைக்கின்றதே அது ஏன்?எப்போதும் இந்தச் சோலையில் இருந்து நீயும் என்னை வதைக்காதே குயிலே.இன்று நாராயணன் என்னுடன் இணைய ,நீ கூவாவிடின், உன்னை இங்கிருந்து துரத்தி விடுவேன் (என..சற்று கண்டிப்பு, சற்று செல்லத்துடன் சொல்கிறாள்) 

No comments:

Post a Comment