Wednesday, February 7, 2018

6- உருவுடை யாரிளை யார்கள் நல்லார்

உருவுடை யாரிளை யார்கள்நல்லார் 
ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் 
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் 
கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
 திருந்தவே நோக்கெனக் கருளுகண்டாய்

உருவுடையார் இளையார்கள்- உருவில் இளமையானவர்கள்
நல்லார் ஓத்துவல்லார்களைக் கொண்டு-மறைஓதும் நல்லவர்களைக் கொண்டு
வைகல்- அதிகாலை நேரம்
தெருவிடை எதிர்கொண்டு-உன்னை தெருவினுக்கே வந்து
பங்குனி நாள் திருந்தவே-பங்குனி நாள் முழுதுமே
நோற்கின்றேன் காமதேவா-காமதேவனே! நோன்பு நூற்கிறேன்
கருவுடை முகில்வண்ணன்-மேகத்தின் நிறம் கொண்டவன்
காயாவண்ணன்-காயம் பூ நிற வண்ணன்
கருவிளை போல் வண்ணன்-கருவிளம்பூ போன்ற நிறத்தான்
கமல வண்ண - தாமரை போன்ற முகத்தான்
திருவுடை முகத்தினில்-அவன் முகத்தில் உள்ள
திருக்கண்கள் திருந்தவே-திருக்கண்களால் தெளிவாக
நோக்கெனக் கருளுகண்டாய்-என்னைப் பார்க்கவே அருள் செய்வாயாக

காமதேவனே! உருவில் இளைஞர்களான மறை ஓதும் நல்லவர்களைக் கொண்டு , அதிகாலை நேரம், உன்னை தெருவினுக்கே வந்து பங்குனி நாள் முழுதும் நோன்பு நூற்கிறேன்.மேகத்தின் நிறம் கொண்டவன்,காயம்பூ நிற வண்னன், கருவிளம் பூ நிறத்தான், தாமரை போன்ற முகத்தான், அவன் முகத்திலுள்ள திருக்கண்களால் என்னைத் தெளிவாகப் பார்த்திட அருள் செய்வாயாக! 

No comments:

Post a Comment