Tuesday, February 20, 2018

29- கஞ்சன் வலைவைத்த வன்று

கஞ்சன் வலைவைத்த வன்று
காருரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்ற இக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சியா லுண்ட
மசிமையி லீ! கூறை தாராய்

கஞ்சன் வலை வைத்த அன்று- கஞ்சன் என்ற உன் மாமன் வைத்த வலையில் அன்று
கார் இருள் எல்லில் பிழைத்து-அடர்ந்த கருமையான இருளில் தப்பித்து
நின்ற இக்கன்னிய ரோமை- நீரில் நின்ற இந்தக் கன்னியர்களை
நெஞ்சம் துக்கம் செய்யப் போந்தாய்-எங்கள் மனம் துக்கம் கொள்ளவா நீ வந்தாய்
ஆணாட விட்டிட்டு இருக்கும்-ஆண்பிள்ளைதானே என விட்டு விட்டு
அஞ்ச உரைப்பாள் அசோதை-உன்னை பயப்படும் படி அதட்ட மாட்டாள் உன் தாய் யசோதை
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட- உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியிடம் பால் உண்ட
மகிமை இலீ! கூறைதாராய்- பெருமை இல்லாதவனே! எங்கள் உடைகளைத் தந்து விடு

உன் மாமன் கம்சன் உன்னை கொல்ல வைத்த வலையிலிருந்து, அடர்ந்த இருளில் தப்பித்து வந்தவனே! இப்படி நீரில் நின்ற கன்னியர்களின் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்வதற்காகவா வந்தாய்? ஆண் பிள்ளைதானே, என உன் தாய் யசோதையும், எங்கள் எதிரே உன்னை கண்டிப்பதாய் நடந்தாலும், அது உண்மையில்லை என நாங்கள் எண்ணுகிறோம்.உன்னை வஞ்சகமாகக் கொலை செய்ய வந்த அரக்கியிடம் பால் உண்டே அவளைக் கொன்ற பெருமை இல்லாதவனே! எங்கள் உடைகளைத் தந்து விடு.

(ஆண்டாளின் பாட்டில் ஒரு யதார்த்தம் இருப்பதால், மனதிற்கு நெருக்கம் இருக்கிறது.கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி தாய் உருவம் கொண்டு, அவள் மார்பகங்களில் நஞ்சு தடவி, கண்ணனுக்கு பால் ஊட்ட, அதை அறிந்த கண்ணன், பாலையும், விஷத்தையும் உண்டு,அந்த அரக்கியின் உயிரையும் எடுக்கிறான்) 

No comments:

Post a Comment