Thursday, February 8, 2018

8 - மாசுடை யுடம்பொடு தலையுலறி

மாசுடை யுடம்பொடு தலையுலறி 
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு,
தேசுடை திறலுடைக் காமதேவா.
 நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் 
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் 
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்.

மாசுடை உடம்போடு- அழுக்கேறிய உடம்புடனும்
தலையுலறி- எண்ணெய்க் கூட தேய்க்காத சரியாகக் கூட வாராத தலையுடனும்
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு-ஒருவேளை உணவு உண்டு மெலிந்த காரணத்தால்சிவந்த இதழ்கள் வெளுத்து
தேக உடை திறல் உடைக் காமதேவா- ஒளி பொருந்திய, காதலர் தேகம் இணைக்கின்ற திறம் பெற்ற காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்-உன்னை நோற்கின்றேன்.என் நோன்பின் நோக்கம் கண்டுகொள்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்-பேசுவது ஒன்று உண்டு இங்கு என் தலைவன்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும் வண்ணம்-என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்-கேசவன் நம்பியின் மனைவியாக்கி அவனுக்கு சேவை செய்வாள்
என்னும் இப்பேறு எனக்கு அருளுண்டாய் - என்னும் பெரும் பேற்றை எனக்கு அருள்வாயாக

அழுக்கேறிய உடல்,எண்ணெய் கூடத் தேய்க்காமல் வாராத தலை, ஒருவேளை மட்டுமே உண்டதால் மெலிந்து, இதழ் வெளுத்து நோன்பு நோற்கிறேன் காமதேவா!ஒளிபொருந்திய , காதலர் தேகம் இணைக்கின்ற திறம் பெற்ற நீ, என் பெண்மையைக் கேசவன் நம்பி தனக்கே உரிமையாக்கும் பேற்றினை எனக்கு அருள்வாயாக

No comments:

Post a Comment