Wednesday, February 14, 2018

18- வட்டவாய்ச்சிறு தூதையோடு

வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடு வோங்களைச்
சிற்றலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச்
சக்கரம் கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை
அறிதியே கடல் கண்ணனே!

வட்டவாய்ச் சிறு தூதையோடு- வட்டவடிய வாய் கொண்ட சிறு பொம்மைப் பானையோடு
சிறு சுளகும் மண்ணும் கொண்டு-சிறிய சுளகும்,மணலும் கொண்டு
இட்டமாய் விளையாடுவோம் எங்களை - வைத்து விளையாடும் எங்களுடைய
சிற்றில் ஈடழித்து என் பயன்- சின்ன வீட்டை அழித்து உனக்கு என்ன பயன்
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்-இப்படி அதை தொட்டு, உதைத்து சேதம் செய்கின்றாயே
சுடர்ச் சக்கரம் கையிலேந்தினாய்-ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே-கருப்பட்டியும், கசந்தால் இனிக்காது என அறியாதவனா நீ
கடல் கண்ணனே-கடல் வண்ணம் கொண்ட கண்ணனே!

வட்டவடிவ வாய் கொண்ட சிறு பொம்மைப் பானையுடன், சிறிய சுளகும், மணலும் கொண்டு, வைத்து விளையாடும் எங்களது சின்ன மணல்வீட்டை அழித்து உனக்கு என்ன பயன்?இப்படி அதை தொட்டு, உதைத்து சேதம் செய்கின்றாயே..!ஒலிறும் சக்கரத்தை கையில் ஏந்திய, கடல் வண்ண கண்ணா, கருப்பட்டி கூட கசந்தால் இனிக்காது என தெரிந்தவன் தானே நீ.

(மணலை சுளகு (முறம்) கொண்டு புடைத்து, வரும் நுண்மணலில் கட்டிய மண் வீடாம்)

No comments:

Post a Comment