Thursday, March 15, 2018

116 - தந்தையும் தாயுமுற் றாரும் நிற்க

தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்தபின்னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க - தந்தையும், தாயும்,உற்றாரும் தவித்து நிற்க

தனிவழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னை - அவர்கள் பேச்சைக் கேட்காது தனிவழியே சென்றாள் என்ற சொல்லும் வந்த பின்னே

பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்- இனியும் பழி வராமல் காப்பது அரிது.மாயங்கள் காட்டும் மாதவன் வந்து தன் உருவத்தைக் காட்டுகின்றான்

கொந்தளம் ஆக்கிப் பரக் கழித்து- குழப்பம் ஆக்கிப் பெரும் பழி விளைவித்து

குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற - குறும்பு செய்கின்ற ஒரு மகனைப் பெற்ற

நந்த கோபாலன் கடைத்தலைக்கே- நந்தகோபாலன் இருக்கும் இடத்திற்கே

நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்- நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்

தந்தையும், தாயும், உற்றத்தாரும் தவித்து நிற்க, அவர்கள் பேச்சைக் கேட்காது, தனிவழியே சென்றாள் (கோதை) என்ற சொல்லும் வந்த பின்னே, இனியும் பழி வாராது காப்பது அரிது.மாயங்கள் காட்டும் மாதவன் வந்து அவன் உருவத்தை எனக்குக் காட்டுகின்றான்.ஆகவே, குழப்பி, பெரும் பழி விளைவித்து ,குறும்பு செய்கின்ற ஒரு மகனைப் பெற்ற நந்தகோபாலன் இருக்குமிடத்திற்கே, நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

(நள்ளிரவு என ஏன் சொன்னாள்? ஏற்கனவே பழி வந்து விட்டது.பகலில் போனால் ஊரார் மேலும் பேசுவர்.ஆகவேதான் நள்ளிரவில்...என் கிறாள் கோதை)

No comments:

Post a Comment