Friday, March 23, 2018

143- பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே

பருந்தாட்களிறுக்கு அருள் செய்த - பருத்த கால்களையுடைய யானைக்கு அருள் செய்த

பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்

விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி

விட்டு சித்தன் கோதை சொல் - விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல்

மருந்து ஆம் என்று தம் மனத்தே -  மருந்து என்றே கொண்டு தம் மனத்தே

வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - நினைத்து வாழ்பவர்கள்

பெருந்தாள் உடைய பிரானடிக் கீழ் - பெரிய திருவடிகளையுடைய எம்பெருமானின் அடிக் கீழ்

பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாமல் என்றும் இருப்பார்கள்

பருத்த கால்களையுடைய யானைக்கு அருளிய பரமனை, விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி, பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன பாடல்களை . வாழ்வு சிறக்கும் மருந்தென்று மனதில் எண்ணி வழிபட்டு, வாழ்பவர்கள், திருமானின் திருவடிகள் கீழ் என்றும் பிரியாமல் இருக்கும் நிலை எய்துவர்

இத்துடன் பதினான்காம் திருமொழியும், நாச்சியார் திருமொழியும் நிறைவுபெற்றது

No comments:

Post a Comment