Tuesday, March 13, 2018

105-எழிலுடைய வம்மனைமீர்

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினாரே

எழிலுடைய அம்மனைமீர் என் அரங்கத்தின் இன் அமுதர் - அழகுமிக்க தாய்மார்களே! என் அரங்கத்தின் இனிமையான அமுதர்

குழல் அழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்- முடியழகர்,வாய் அழகர் கண்ணழகர் தொப்புளில்

எழுகமலப் பூவழகர் எம்மானார்- இருந்து எழுந்த தாமரைப்பூ கொண்ட அழகர் என் தலைவர்

என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினாரே!- என்னுடைய கழல்வளையைத் தாமும் என் கைகளில் இருந்து கழல்கின்ற வளையல் ஆக்கிவிட்டாரே!

(குழ்ந்தையை, கண்ணே, மூக்கே எனக் கொஞ்சுவது போல சொல்கிறாள்) என் அழகு தாய்மார்களே! என்னுடை திருவரங்க அமுதன், முடியழகர், வாய் அழகர், கண்ணழகர் , அவரது தொப்புளில் இருந்து எழுந்த தாமரைப்பூ கொண்ட அழகர்...என் தலைவர்(அவரை நினைத்து, நினைத்து வேதனையால்) என்னுடைய கழல்வளையை, கைகளிலிருந்து கழல்கின்ற வளை ஆக்கிவிட்டாரே (என புலம்புகிறாள்)

(கழல் வளை- ஒருவகை வளையல்) 

No comments:

Post a Comment