Sunday, March 4, 2018

74-விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்



(எட்டாம் பத்தில் கோதை மேகத்தை தூது விடுகிறாள். .ஆம்...மேகம் விடு தூது)

விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே


விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்- நீல வானத்தில் போர்வை விரித்தது போன்று தோற்றமளிக்கும் மேகங்களே
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே-தெளிந்த நீர் பாயும் வேங்கடத்திற்கு என் திருமாலும் வந்தாரோ?
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளைசோரச் சோர்வேனை-நான் சிந்தும் கண்ணீர்த் துளிகள் என் முலைஎனும் மலையிலே சிறுதுளிப் பட்டாலும் ஆவி ஆகிவிடும்
பெண்ணீர்மை ஈடு அழிக்கும் இது தமக்கோர் பெருமையே- என் பெண்மையைச் சிதைக்கும் இச்செயல் அவருக்குப் பெருமையா?

நீலமேகத்தில் போர்வை விரித்தாற்போல் செல்லும் மேகங்காள்,தெளிந்த நீர் பாயும் வேங்கடத்துக்கு என் திருமாலும் வந்தாரோ?நான் (அவரை எண்ணி) சிந்தும் கண்ணீர்த் துளிகள் என் முலை எனும் மலையிலே சிறிது பட்டாலும் (என் உள்ளச் சூட்டினால்) ஆவி ஆகிவிடும்.என் பெண்மையை சிதைக்கும் இச்செயல் கண்ணனுக்குப் பெருமையைத் தந்திடுமோ?

(கண்ணீர்த் துளி, சுடச் சுட வீழ்ந்து ஆவி ஆகி விடுகிறதாம்.உடல் அவ்வளவு தகிக்கிறதாம்)

No comments:

Post a Comment