Sunday, March 18, 2018

125 - பாலா லிலையில் துயில்கொண்ட

பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்பொல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறி மென் குழல்மேல் சூட்டீரே

பால் ஆல் இலையில் துயில்கொண்ட - பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட

பரமன் வலைப்பட்டு இருந்தேனை - பரமனிடம் அன்புற்றுஅந்த வலையில் இருந்தவளை

வேலால் துன்னம் பெய்தாற்போல்- வேலால் துளை செய்தது போல

வேண்டிற்று எல்லாம் பேசாதே - உங்களுக்கு வேண்டியது எல்லாம் (வாய்க்கு வந்தபடி) பேசாமல்

கோலால் நிரை மேய்த் தாயனாய் - தடி கொண்டு பசு மேய்த்த ஆயனாய்

குடந்தைக் கிடந்த குடமாடி - திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன்

நீல் ஆர் தண்ணந் துழாய் கொண்டென் -
கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு (கருந்துளசி)

நெறி மென் குழல் மேல் சூட்டீரே- அடர்ந்த மென்மையான என் கூந்தல் மேல் சூட்டி விடுங்கள்

பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட பரமனிடம் அன்புற்று அந்த வலையில் சிக்கி இருந்தவளை,வேலால் துளை செய்தது போல, (என் மனம் புண்படும்படி) உங்களுக்கு வேண்டியது எல்லாம் (வாய்க்கு வந்தபடி) பேசாமல்,தடி கொண்டு பசு மேய்த்த ஆயபாய், திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன் போல் கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு, அடர்ந்த மென்மையான என் கூந்தலில் சூட்டி விடுங்கள்

(பண்டைய காலத்தில் குடக்கூத்து மிகப் பிரபலமானது)

No comments:

Post a Comment