Saturday, March 17, 2018

121 - கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள் உங்களுக்  கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் - கன்றுகள் இனம் மேய்த்து அதையேத் தொழிலாகப் பெற்றான்

காடுவாழ் சாதியுமாகப் பெற்றான் - காட்டிலே வாழ்ந்து இடையர் சாதியுமாகப் பெற்றான்

பற்றி உரல் இடையாப்பும் உண்டான் - தனது குறும்புத்தனங்களால் தனது தாயால் உரலில் கட்டப்பட்டும் கிடந்தான்

பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ - பாவிகளே! உங்களது ஏச்சுகளை நிறுத்தும் நாள் எந்நாளோ

கற்றன பேசி வசையுணாதே -  அவனை வசைப்பாடக் கற்றதை வைத்துக் கொண்டு ஏதேனும் பேசி என்னிடம் திட்டு வாங்காதீர்கள்

காலிகள் உய்ய மழை தடுத்து - பசுக்கள் உய்ய மழை தடுத்து

கொற்றக் குடையாக ஏந்தி நின்ற - ஒரு அரசனாக, தன்னைக் காப்பாற்றியவர்களை காக்க குடை ஏந்தி நின்ற

கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின் - கோவர்த்தன மலைக்கு என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

(காலிகள் - பசுக் கூட்டங்கள்)

கன்றுகள் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டு, இடையர் சாதியாயினாய்.உனது குறும்புத்தனங்களைப் பொறுக்கமுடியாது, தாயினால் , உரலில் கட்டப்பட்டாய்.இப்படி உன்னைப் பற்றிப் பாவிகள் ஏசுவதை என்று நிறுத்தப் போகிறார்களோ!இப்படி அவனை யேசுபவர்கள்!..அதானால் நான் உங்களை வசைப்பாடச் செய்து விடாதிர்கள்.
பசுக்களைக் காக்க , ஒரு அரசனாக, கோவர்த்தனமலையைக் கையில் ஏந்தி நின்ற கோவர்த்தன மலைக்கு என்னை கொண்டு சேர்த்துவிடுங்கள்

(மழை வேண்டி நந்தகோபர், இந்திரனுக்கு யாகம் செய்ய முயற்சிக்க, சில காரணங்களைச் சொல்லி அதைத் தடுத்தான்.அதனால் கோபமுற்ற, இந்திரன் , ஊரே அழியுமாறு பெரு மழையைத் தோற்றுவித்தான்.பசுக்களையும், மக்களையும் அழிவிலிருந்து காக்க கோவர்த்தனகிரியை தன் ஒற்றைவிரலில் ஏந்தி காத்தான் கண்ணன்.அந்த கோவர்த்தனகிரிக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுங்கள்)

No comments:

Post a Comment