Monday, March 19, 2018

126 - கஞ்சைக் காய்ந்த கருவில்லி

கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்கணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னானவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே

கஞ்சைக் காய்ந்த கருவில்லி - கம்சனை வீழ்த்திய, கருமை நிற வில்லனைப் போன்ற புருவம் கொண்ட

கடைக்கண் என்னும் சிறைக்கோலால் - கடைக்கண் பார்வை எனும் விழி அம்பால்

நெஞ்சு ஊடுருவ - (புருவ வில்லில் இருந்து புறப்பட்ட அந்த பார்வை அம்பு என்) நெஞ்சை ஊடுருவ

வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை - நெஞ்சம் வெந்து என் நிலையும் தளர்ந்து நொந்து இருப்பவளை

அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - அஞ்சாதே என சொல்லாத ஒருவன்

அவன் மார்  அணிந்த வனமாலை - அவன் மார்பில் அணிந்த வனமாலை

வஞ்சியாதே -என்னை வஞ்சிக்காமல்

தருமாகில் - தந்தான் என்றால்

மார்வில் கொணர்ந்து புரட்டீரே! - என் மார்பில் கொண்டு வந்து புரட்டுங்கள்

கம்சனை வீழ்த்திய, கருமை நிற வில்லனைப் போன்ற புருவம் கொண்டவன், கடைக்கண் பார்வை என்னும் விழி அம்பால் நெஞ்சை ஊடுருவ, ஏற்கனவே அவன் நினைவால் நெஞ்சம் வெந்து தளர்ந்து இருப்பவளை..அஞ்சாதே என சொல்லாதவன்..குறைந்தது அவன் மார்பில் அணிந்த வனமாலையையாவது தந்தான் எனில், அதை என் மார்பில் கொண்டுவந்து போடுங்கள்

No comments:

Post a Comment