Thursday, March 15, 2018

114- மற்றிருந் தீர்கட் கறியலாகா

(கண்ணனைக் காணவேண்டும் என்ற ஆசையை பன்னிரெண்டாம்  பத்தில் சொல்கிறாள்.ஆயர்பாடி செல்ல ஆசைப்படுகிறாள்)

மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவனென்பதோ ரன்புதன்னை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திருமின்

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா - என்னுடம் மாற்றுக் கருத்துக் கொண்டவர்க்கு என் வேதனைத் தெரியப் போவதில்லை

மாதவன் என்பதோர் அன்பு தன்னை- மாதவன் மீது அன்பு

உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்- கொண்டிருக்கும் எனக்கு நீங்கள் பேசுவது எல்லாம்

ஊமையரோடு செவிடர் வார்த்தை - ஊமைகளும், செவிடர்களும் பேசிக் கொள்வதைப் போன்றது

பெற்றிருந்தாளை ஒழியவே போய்- பெற்ற அன்னையான வாசுகியைப் பிரிந்து

பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-  வேறோரு தாயிடம் வளர்ந்த நம்பி

மற்பொருந்தாமல் களம் அடைந்த - மற்போரில் போர் புரிவதற்கு முன்பே களம் அடைந்த

மதுரைப் புறத்து என்னை உய்த்திருமின் - (கண்ணன் இருக்குமிடமான) மதுரையில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

என்னுடன் மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கு என் வேதனைத் தெரியப் போவதில்லை (அப்போதே ஆண்டாளுக்கு எதிர்ப்பு இருந்தாற்போல் இருக்கிறது)மாதவன் மீது அன்பு கொண்டிருக்கும் எனக்கு, நீங்கள் பேசுவது எல்லாம்  ,ஊமைகளும், செவிடர்களும் பேசிக்கொள்வதைப் போன்றது.
பெற்ற அன்னையான வாசுகியைப் பிரிந்து, வேறொரு தாயிடம் (யசோதையிடம்) வளர்ந்த நம்பி, மற்போரில் போர் புரிவத்ர்கு முன்பே களம் அடைந்த (வீரர்களை அணைத்து, போர் புரிவத்ற்கு முன்) கண்ணன் இருக்கும் மதுரையில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள் (அவன் அணைப்பு முதலில் எனக்கே)

No comments:

Post a Comment