Wednesday, March 21, 2018

137 -கார்த்தண் கமலக் கண்ணென்னும்

கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னை கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

கார்த்தண் கமலக் கண்ணன் என்னும் - கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால்

நெடுங்கயிறு படுத்தி என்னை - நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி

ஈர்த்துக் கொண்டு விளையாடும் - என்னைக் கவர்ந்து கொண்டு என்னுடன் விளையாடும்

ஈசன் தன்னைக் கண்டீரே - இறைவன் தன்னைப் பார்த்தீர்களா

போர்த்த முத்தின் குப்பாய - போர்வை போர்த்தியது போல முத்துக்களால் ஆன சட்டையுடன்

புகார்மால் யானைக் கன்றே போல் - ஒளி ர்கின்ற யானைக் கன்றினைப் போல

வேர்த்து நின்று விளையாட - வேர்க்க விறு விறுக்க நின்று விளையாட

விருந்தா வனத்தே கன்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்

கேள்வி -  கருத்த மேகத்திலே, குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்களாய், என்னைக் கவர்ந்து...நீளமான கயிறினால் கட்டிப் போட்டு என்னுடன் விளையாடும் இறைவனைக் கண்டீர்களா

பதில் - ஒளிர்கின்ற யானைக் கன்றினைப் போல வியர்த்து விறுவிறுக்க , வியர்வை முத்துகள் மேயின் போர்வை போர்த்தியது போல தோன்ற விருந்தாவனத்தில் விளையாடுபவனைக் கண்டோம்

136 - மாலாய்ப் பிறந்த நம்பியை

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பான
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய் பிறந்த நம்பியை

மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணாளனை

ஏலாய் பொய்களுரைப்பான் - ஏற்றுக் கொள்ள முடியாத பல பொய்களை உரைப்பவனை

இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா

மேலால் பரந்த வெயில் காப்பான் - வெயில் உடலில் படாது காப்பவன்

வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்

சிறகென்னும் மேலாப் பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியில் கீழ் வருவானை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்


கேள்வி - கருமையாய் பிறந்த நம்பி, என்னை மயக்கம் கொள்ள வைத்த என் மணாளன், ஏற்றுக் கொள்ள முடியா பல பொய்களை உரைப்பவன், இங்கே வரப் பார்த்தீர்களா?

பதில் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடன், மேலாக விரித்த சிறகின் கீழ், வெயில் உடலில் படாது வந்தவனை விருந்தாவனத்தில் கண்டோமே

(வினதை- கருடனின் தாய், காசிபர் - கருடனின் தந்தை, வினடஹி சிறுவன் - கருடன்)

கண்ணனுடன் கற்பனையில் வாழ்ந்தவள்.பல விதங்களிலும் வேண்டியும், பிரார்த்திதும், தூது அனுப்பியும் வராதவன்...ஆகவே இப்பாடல்கள் மூலம், பொய்யன், .வெண்ணெய் மணத்தவன் குட்டக்காளை என்றெல்லாம் அம்னம் போனபடி செல்லமாக திட்டுகிறாள்  

135 - அனுங்க வென்னைப் பிரிவுசெய்

அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தன்னைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

அனுங்க என்னைப் பிரிவிசெய்தாய் - என்னை வருந்த என்னை பிரிவு செய்து

ஆயர்பாடி கவந்துண்ணும் - ஆயர்பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும்

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தன்னைக் கண்டீரே - வெண்ணெய் மணம் கொண்டவன் , குட்டைக்காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா?

கணங்களோடு மின் மேகம் கலந்தாற்போல _ தன் நண்பர் கூட்டத்தோடு , மின்னும் மேகம் கலந்தாற்போல

வனமாலை மினுங்க நின்று விளையாட - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலைகள் மினுங்க அங்கு நின்று விளையாடிய (வனை)

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோமே

கேள்வி - என்னை வருத்தமடைய வைத்து, பிரிந்த, ஆயர்பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும், வெண்ணெய் மணம் கொண்ட குட்டைக்காலை கோவர்த்தனனைக் கண்டீர்களா?

பதில் - தன் நண்பர் கூட்டத்தோடு, மின்னும் மேகம் கலந்தாற்போல, கருத்த தேகத்தில் பலநிற பூக்கள் கலந்த மாலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவனை விருந்தாவனத்திலே கண்டோமே

134 - பட்டி மேய்ந்ததோர் காரேறு

(பதினான்காம் பத்து ஆரம்பம்)
கடைசி பத்து.திருமாலின் அவதாரங்களை கோதை புகழ்ந்தாலும், அவள் மனம் நாடுவதோ கண்ணனை.
இப்பத்துப் பாடல்களில், அவள் கண்ணனியப் பார்த்தீர்களா? எனக்கேட்பது போலவும்..அப்படி கேட்கப்பட்டவர்கள் பார்த்ததாகக் கூறுவது போலவும் பாடல்கள் அமைந்துள்ளன.
ஆனாலும், ஆண்டாள் இறுதிவரை அவனைப் பார்த்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.அவள் மனம் தவிப்புடனேயே இருந்திருக்கிறாள்.
ஆனாலும், நமக்கு அவளை, பெருமாளிடம் இருந்து பிரித்து அறியமுடியவில்லை

இனி கடைசி பத்துப் பாடல்களைக் காணலாம்..

பட்டி மேய்ந்ததோர் காரேறு
பலதே வர்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

பட்டி மேய்ந்ததோர் காரேறு - தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை

பலதேவர்க்கு ஓர் கீழ்க்கன்றாய் - பலதேவருக்கு ஒரு நல்ல தம்பியாய்

இட்டீறிட்டு விளையாடி - செருக்குடன் விளையாடு

இங்கே போதக் கண்டீரே - இங்கே வரக் கண்டீர்களா?

இட்டமான பசுக்களை - தனக்கு விருப்பமான பசுக்களை

இனிது மறித்து நீரூட்டி - இனிமையாகப் பேசி, தடுத்து, அவற்றிற்கு நீரூட்டி

விட்டுக் கொண்டு விளையாட - மேய விட்டுக் கொண்டு விளையாட

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்திலே நாங்கல் கண்டோம்

கேள்வி - தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை, பலதேவரின் நல்ல த்ம்பியாய், செருக்குடன் (சற்றே மிதப்பௌடன்) விளையாடி இங்கே வரக் கண்டீர்களா?

பதில்- தனக்கு விருப்பமான பசுக்களை, மேயச் செல்லும் போது, நிறுத்தி, அவற்றிற்கு நீர் வைத்து,பின் மேய்விட்டு அவன் விளையாடுவதைக் கண்டோம்

Tuesday, March 20, 2018

133 - அல்லல் விளைவித்த பெருமானை

அல்லல் விளைவித்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே

அல்லல் விளைவித்த பெருமானை - துன்பம் கொடுத்த பெருமானை

ஆயர் பாடிக் கணிவிளக்கை - ஆயர்பாடியின் அழகான விளக்கை


வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்த்ன் வியன் கோதை - வில்லிப்புத்தூர் நகர நம்பி விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வாரால் பெருமைப் பெற்ற கோதை

வில்லைத் தொலைத்த புருவத்தாள் - தன் வேதனையால் வில்லைனைப் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள்

வேட்கையுற்று மிக விரும்பும் - வேட்கைக் கொண்டு மிகவும் விரும்பும்

சொல்லைத் துதிக்க வல்லார்கள் - சொல்லை (பாடலை) பாட வல்லவர்கள்

துன்பக் கடலுள் துவளாரே - துன்பம் எனும் கடலில் துவள மாட்டார்கள்

(கோதைக்கு ) துன்பம் அளித்த பெருமான், ஆயர்பாடியின் அழகான விளக்கு, வில்லிப்புத்தூர் விஷ்ணு  சித்தன் பெரியாழ்வாரின் மகள்
  கோதை விரும்பும் அழகன், அவன் நினைவால் தன் வில்லைப் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள் பாடிய பாடல்களை பாடுபவர்கள் (திருமாலின் மீதான பாடல்கள்) துன்பம் எனும் கடலில் துவள மாட்டார்கள்

பதின்மூன்றாம் பத்து முடிவுற்றது)

132 - கொம்மை முலைக ளிடர்தீரக்

கொம்மை முலைக  ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே

கொம்மை முலைகள் இடர் தீர - திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர

கோவிந்தற்கு ஓர் குற்றேவல் - கோவிந்தனுக்கு ஒரு தொண்டு

இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான்  என் - இந்தப் பிறவியில் செய்யாது இனி வேறொரு பிறவியில் செய்யும் தவம் தான் எதற்கு

செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் - செம்மையுடைய அவனது திருமார்பில் என்னை ஏற்றுக்கொண்டான் எனில் நன்று

ஒருஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி - ஒருநாளேனும் உண்மை சொல்லி என் முகம் நோக்கி

விடைதான் தருமேல் மிக நன்றே - எனக்கு ஒரு விடை தந்தால்மிகவும் நன்று 

இரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர கோவிந்தனுக்கு ஒரு சிறு தொண்டு.இப்பிறவியில் செய்யாது அடுத்தப் பிறவியில் செய்ய தவம் செய்ய வேண்டுமெனில்..அப்படி ஒரு தவம் எதற்கு? அவனது சிவந்த மார்பில் என்னை சேர்த்து அணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.அல்லது ஒருநாளேனும் உண்மை சொல்லி (என்னை ஏற்றுக் கொள்வானா? இல்லையா?என)என் முகம் நோக்கி
சொல்லி,விடத்தருவானாகில் நன்றி

131 - உள்ளே யுருகி நைவேனை

உள்ளே யுருகி நைவேனை
உள்ளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தன்னை கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே

உள்ளே யுருகி நைவேனை - (இவனுக்காக) என் உடல் மட்டுமின்றி உள்ளமும் உருக் உருகி நைந்து போய்க் கொண்டிருக்கிறது

உள்ளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கிறாளா அல்லது இல்லாமல் போய்விட்டாளா என்னவெனக் கேட்காத

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் -  என்னைக் கொள்ளைக் கொண்ட குறும்பனைக்

கோவர்த்தன் தன்னைக்  கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கியவனைக் கண்டீரகளே ஆனால்

கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கை தன்னை - அவனை அடையாமல் எந்த பயனற்றும் இருக்கும் என் கொங்கைகளை

கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேருடன் பறித்து அள்ளிப் பறித்து

அவன் மார்பில் எறிந்தென் மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே - அவன் மார்பிலே எறிந்து காமத்தினால் (எனக்கு ஏற்பட்டுள்ள) உண்டான என் வெப்ப நோயைத் தீர்ப்பேன்

கண்ணனை எண்ணி என் உடம் மட்டுமின்றி, உள்ளமும் உருகி நைந்துப் போய்க் கொண்டிருக்கிறது/இவள் உயிரோடு இருக்கிறாளா..இல்லையா என்று கூடக் கேட்காத, அந்த கோவர்த்தன மலையைத் தூக்கியவனைக் கண்டீர்கள் ஆனால் சொல்லுங்கள்.அவனை அடையாமல் , எப்பயனும் இல்லா என் கொங்கைகளை வேருடன் பறித்து, அவன் மீது எறிந்து எனக்குண்டான காமத் தீயை தீர்த்துக் கொள்கிறேன்